
கொல்கத்தாவில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலத்தில் கொல்கத்தாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப மேலாண்மை வணிகக் கல்லூரியின் விடுதியில் மாணவி ஒருவர் தங்கி படித்து வந்தார்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமையில் ஆலோசனை அமர்வு என்றுகூறி, ஆண்களின் விடுதிக்கு மாணவியை இரண்டாமாண்டு மாணவர் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, போதை மருந்து கலக்கப்பட்ட குளிர்பானத்தையும் மாணவிக்கு அளித்ததுடன், பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கியுள்ளனர்.
குளிர்பானத்தால் மயக்கமடைந்திருந்த மாணவி, சுயநினைவு திரும்பியவுடன், தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதை உணர்ந்தார்.
இதனையடுத்து, தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் மாணவர் மீது மாணவி புகார் அளித்தார். தொடர்ந்து, விசாரணை நடத்திய காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்ட மாணவரை கைது செய்தனர்.
கடந்தாண்டு மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், கடந்த மாதம் சட்டக் கல்லூரி மாணவி ஒருவரும் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும் மீண்டுமொரு அதிர்ச்சியை உண்டாக்கியது.
இந்த நிலையில், வணிகக் கல்லூரியில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தின் மூலம் மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு குறித்த அச்சம் ஏற்படத்தான் செய்கிறது என்கின்றனர், மேற்கு வங்க மக்கள்.