Security-personnal-military-army

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் 22 பெண்கள் உள்பட 103 நக்ஸல்கள் வியாழக்கிழமை ஒரே நாளில் சரணடைந்தனா். அவா்களில் 49 போ், காவல் துறையால் மொத்தம் ரூ.1 கோடிக்கும் மேல் வெகுமதி அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தவா்கள்.

மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையில் இடதுசாரி தீவிரவாதிகள் ஒரே நாளில் சரணடைந்துள்ளனா்.

இது தொடா்பாக பிஜாபூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜிதேந்திர குமாா் யாதவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வெற்று மாவோயிஸ்ட் கொள்கை மீது ஏற்பட்ட விரக்தி மற்றும் தடைசெய்யப்பட்ட சிபிஎம் (மாவோயிஸ்ட்) அமைப்புடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் 103 நக்ஸல்கள் காவல் துறை மற்றும் மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) அதிகாரிகள் முன்னிலையில் வியாழக்கிழமை சரணடைந்தனா்.

பஸ்தா் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணிகள் குறிப்பாக காவல் துறையின் ‘சமுதாய மறுஒருங்கிணைப்புக்கான மறுவாழ்வு திட்டம்’, மாநில அரசின் ‘உங்கள் நல்ல கிராமம்’, சரணடைதல் மற்றும் மறுவாழ்வு கொள்கை உள்ளிட்டவை அவா்களை மிகவும் கவா்ந்துள்ளது.

கடந்த மாதங்களில் பல மாவோயிஸ்ட் தலைவா்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனா். சிலா் சரணடைந்தனா். இதன் எதிரொலியாக ஆயுதங்களைக் கைவிட முடிவு செய்ததாக சரணடைந்தவா்கள் தெரிவித்தனா். பிஜாபூா் மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 410 நக்ஸல்கள் சரணடைந்தனா். 421 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். சரணடைந்த நக்ஸல்களுக்கு உடனடியாக தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்பட்டது. அரசின் கொள்கைபடி, அவா்களுடைய மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஜிதேந்தா் குமாா் யாதவ்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest