
குஜராத் மலைக்கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் 5 கி.மீ. தூரத்துக்கு கர்ப்பிணி பெண்ணை சுமந்துச் சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.
மூங்கில் கட்டையில் புடவையால் தூளி கட்டி, கர்ப்பிணிப் பெண்ணை சுமந்து வந்து அவசர ஊர்தியில் ஏற்றியுள்ளனர். எனினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
குஜராத் மாநிலம் சோட்டே உதேபூர் மாவட்டத்தில்தான் இந்தத் துயர சம்பவம் நடந்துள்ளது. பழங்குடி மக்கள் அதிகம் வசித்துவரும் துர்கேடா மலைக்கிராமத்திலுள்ள சாலை வசதியற்ற கைதி பாலியா கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு நேற்று மாலை 4 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
சாலை வசதி இல்லாததால், வாகனங்கள் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. இதனால், வேறு வழியின்றி அவரின் குடும்பத்தினர், மூங்கில் கட்டையில் தூளி கட்டி கர்ப்பிணிப் பெண்ணை 5 கி.மீ. தூரத்துக்கு சுமந்து சென்றுள்ளனர்.
சாலை வசதி இல்லாததால், காத்திருந்த அவசர ஊர்தியில் கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
முதலில் குவான்ட் பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பிறகு அங்கிருந்து சோட்டே உதேபூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பெண் குழந்தையை ஈன்று தாய் உயிரிழந்துள்ளார். ஏற்கெனவே இவருக்கு 4 குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது 5 குழந்தைகளும் தாயின்றி வளரும் சூழல் உருவாகியுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் இங்கு அடிக்கடி நடப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த அக். 1 ஆம் தேதி பஸ்காரியா பாலியா கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண், இதேபோன்று தூளி கட்டி தூக்கிச்செல்லும்போதே பிரசவம் நடந்துள்ளது. இதிலும், குழந்தையை ஈன்ற பிறகு தாய் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவங்களின் தொடர்கதையால், இது குறித்து குஜராத் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இதில், துர்கேடா பகுதியை இணைக்கும் வகையில் அதனைச் சுற்றியுள்ள நான்கு பாலியா கிராமங்களுக்கு சாலை வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட்டது. ஆனால், இதுவரை முழுமையாக சாலைகள் அமைக்கப்படாததால், சோட்டே உதேபூர் மாவட்டத்திலுள்ள மலைக்கிராம மக்கள் அவதியுறும் நிலையே நீடித்து வருகிறது.
இதையும் படிக்க | உத்தரகண்டில் வெள்ளம்: 5 பேர் பலி, பலர் மாயம்!