
சினிமா உலகின் சிகரம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவரது 24வது நினைவு தினம் இன்று. கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் ‘என் ஆச ராசாவே’ என்ற படத்தில் அவர் நடித்திருந்ததால், நடிகர் திலகத்தின் நினைவலைகள் குறித்து கஸ்தூரி ராஜாவிடம் கேட்டோம். கனத்த இதயத்துடன் பேச ஆரம்பித்தார்…

சினிமாவை தவிர வேற எதிலும் அவர் கவனம் இருக்காது.!
” இதுவரைக்கும் 25 படங்கள் டைரக்ட் பண்ணியிருப்பேன். அதுல முத்தாய்ப்பான ஒரு அனுபவம்னா நடிகர் திலகத்துடன் பணியாற்றியதுதான். அவருடன் பணிபுரிந்த அனுபவங்களை சொல்றதுக்கு வார்த்தைகளே கிடையாது. அவரோட படம் பண்ணும் போதுதான் நான் ஒரு இயக்குநர் என்பதையே நான் ஒத்துக்கிட்டேன். அப்படி ஒரு அனுபவம் இனிமே நமக்கு ஏற்படப் போறதும் இல்ல. அப்படி ஒரு நடிகர் இனிமே வரப்போறதும் இல்ல. சினிமாவை தவிர வேற எதிலும் அவர் கவனம் இருக்காது.
‘என் ஆச ராசா’ படப்பிடிப்புக்கு அவர் அதிகாலை 6.50க்கு மேக்கப்போடு இருந்தது ஒரு நாளும் தவறினதில்லை. அவரோட டேக்குகள்ல வசன உச்சரிப்புகளினாலேயோ, முக அசைவுகள்னாலேயோ ஒரு டேக் கூட ரீடேக் போனதில்ல. நடிப்பின் மீது அவருக்கு இருந்த ஈடுபாடு பிரமிக்க வச்சிடுச்சு. இப்பெல்லாம் நடிகர்கள் ஒரு ஷாட் முடிந்ததும், உடனே கேரவனுக்கு போயிடுறாங்க. ஆனா, அவர் ஒரு ஷாட் முடிஞ்சலும் கூட படப்பிடிப்பு நடக்கும் இடத்தை விட்டு, வெளியே எங்கேயேயும் போக மாட்டார்.
ஒரு சேரை போட்டு அங்கேயே உட்கார்ந்து மற்ற நடிகர்கள் எப்படி நடிக்குறாங்க, எப்படி பேசுறாங்கனு என்பதையும் அந்த ஷாட்டுல டைரக்டர் என்ன தப்பு பண்றார்னும் கவனிப்பார். அதன் பிறகு அவர் ஷாட்டில் நடிக்கும் போது, எல்லார் தப்பையும் சரி செய்யற மாதிரி அழகா நடிச்சிடுவார். இது தான் அனுபவம்னு புரிய வச்சிடுவார்.
இன்னொரு முக்கியமான சம்பவம் ஒண்ணு சொல்றேன். ஒரு நாள் சிவாஜி கார்டன்ல படப்பிடிப்பு. அதற்கு அடுத்தநாள் சிவாஜி சாரோட காம்பினேஷன்ல மற்ற நடிகர்களும் சேர்ந்து நடிக்கற ஷாட் படமாக்கணும். ஆனா, முதல்நாள் சாயந்திரமா அவர் வீட்டுல இருந்து போன் வந்தது. ‘சிவாஜி சாருக்கு கடுமையான காய்ச்சல். ஷூட்டிங்கை ஒருநாள் தள்ளி வச்சுக்க முடியுமா?’ கேட்டாங்க. சரினு சொல்லி ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிட்டோம். ஆனா அன்னிக்கு நடுராத்திரியில் அவர் வீட்டுல இருந்து போன் பண்றாங்க. ‘எல்லாரும் அசம்பிள் ஆகுறதுக்கு எவ்வளவு சிரமம்னு தெரியும். ஆதனால, ஷூட்டிங் தடைபட வேண்டாம். நாளை வந்துடுறேன்.. சொல்லச் சொன்னாங்க”னு போன்ல சொன்னாங்க. மறுநாள் அவர் படப்பிடிப்புக்கு வர்றார். அவரோட மூக்கிலும் கண்கள்லேயும் நீர் ஊத்துது. 103 டிகிரி கடும் காய்ச்சல்ல வந்து நடிச்சுக் கொடுத்துப்போனார். அதான் சிவாஜி.” என்கிறார் நெகிழ்வுடன்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…