
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசின் தாய் சேய் நல மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 27 கர்ப்பிணிகள் மற்றும் 20 பிரசவித்த தாய்மார்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சையில் இருக்கும் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டுள்ளது.
இதை அடுத்து 9 கர்ப்பிணிகள் மற்றும் 18 பிரசவித்த தாய்மார்கள் என 27 பேருக்கு நடுக்கத்துடன் காய்ச்சல் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அச்சமும், பரபரப்பும் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தலைமை மருத்துவர் அருண் ராஜ்குமார் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் விரைந்து வந்து மாற்று மருந்து செலுத்தினர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் குணமடைந்தனர். அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் கர்ப்பிணி ஒருவர் மட்டும் உடல்நிலை சரியாகாமல் இருக்க அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் அரசு தாய், சேய் நல மையத்தில் சிகிச்சை பெறும் பெண்களின் குடும்பத்தினர் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சீர்காழி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், சீர்காழி அரசு ஆய்வு செய்த மையத்தில் ஆய்வு நடத்தியதுடன், பாதிக்கப்பட்ட பெண்களிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து சீர்காழி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அருண் ராஜ்குமார் மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை அளித்துள்ளார்.
இந்நிலையில், நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பானுமதி தலைமையில் 5 டாக்டர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, சந்தேகத்திற்கிடமான மருந்துகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஆய்வு முடிவு வரும் வரை சீர்காழி அரசு மருத்துவமனையில் தற்போது இருப்பு உள்ள நோய் எதிர்ப்பு மருந்தை நோயாளிகளுக்கு செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மருந்து செலுத்தப்பட்ட கர்ப்பிணிகள் உள்ளிட்ட அனைவரது உடல்நிலை சீராக இருப்பதாக அரசு தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிலர் கூறுகையில், “கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு மருந்து கொடுக்கப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அனைவருக்கும் மாற்று மருந்து கொடுத்தனர்.
அதன் பிறகும் உடல்நிலை சீராகாதவர்கள் மயிலாடுதுறை மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது” என்றனர்.