cellphone070334

புகைப்பழக்கத்தைவிடவும், செல்போன் பழக்கத்திலிருந்து விடுபடுவது அவ்வளவு கடினமாம், முடியாமல் போகும் வாய்ப்பு அதிகமாம், சாத்தியமாவதற்கான வாய்ப்புக் குறைவு என்கிறது அறிவியல் ஆராய்ச்சிகள்.

ஒருநாளைக்கு சராசரிசயாக ஒருவர் சுமார் 5 மணி நேரம் செல்போனில் செலவிடுவதாகவும், சாதாரண நபர் ஒருவர் 58 முறை செல்போனில் தங்களுக்கு ஏதேனும் தகவல் வந்திருக்கிறதா என்று பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு அறையில் நான்குபேர் இருந்தால், அரட்டை சப்தம் கேட்கும், ஆனால், இப்போதோ, நான்கு பேரும் அவரவர் செல்போனில் மூழ்கிப்போகிறார்கள்.

பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருப்பது என்னவென்றால், செய்திகள் படிக்கிறோம், வேலை விஷியமாகத்தானே பார்க்கிறோம், சமூகத்தில் என்ன நடக்கிறது என்றுதானே தெரிந்து கொள்கிறோம் என்று சமாதானம் செய்துகொண்டாலும் உண்மை அதுவல்ல. பெரும்பாலான மனிதர்கள் செல்போன் பார்க்கும் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார்கள் என்பதுதான். உண்மை கசக்கத்தான் செய்யும்.

ஒருவேளை, இதில் நம்பிக்கை வரவில்லை என்றால் சுயமாக நாமே சோதனை செய்தும் பார்த்துக் கொள்ளலாம். ஆம் என்றுதான் வரும். இது இங்கு, அங்கு என்றில்லாமல், உலக நாடுகள் முழுமைக்கும், அனைத்து வயதினருக்குமானதாகவே உள்ளது.

வழக்கத்தை விட அதிகமாக செல்போன் பார்க்கும்போது, அது அன்றாட வாழ்க்கையை பாதித்துவிடுகிறது. பலருக்கும் இது மனநலப் பிரச்னையை உருவாக்கிவிடுகிறது. சிலர் மன உளைச்சல், மன அழுத்தத்துக்கு ஆளாவதாக மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

இது மட்டுமல்லாமல், விரல் விட்டு எண்ண முடியாத அளவுக்கு நோய்களையும் வாங்கிக்கொடுத்து விடுகிறது. தூக்கமின்மை, கண் எரிச்சல், கண் பார்வை மங்குதல், நினைவுத்திறன் குறைவது, கவனக்குறைவு போன்றவையும் நேரிடுகிறது.

செல்போன் பழக்கத்திலிருந்து தப்பிக்க, முதலில், இதையெல்லாம் முயற்சித்துப் பார்க்கலாம்.

  • அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதள செயலிகளை செல்போனின் முகப்புப் பக்கத்திலிருந்து நீக்கிவிடலாம்.

  • ஒவ்வொரு சமூக வலைதள செயலிகளுக்கும் பெரிய பாஸ்வேர்டுகளை வைத்துக் கொள்ளலாம்.

  • ஒருசில செயலிகளைப் பயன்படுத்தும் அதிகபட்ச நேரத்தை நியமிக்கும் வசதி உள்ளது. அதனைப் பயன்படுத்தலாம்.

  • ஸ்பேஸ், ஃபாரஸ்ட், பிளிப்டு, ஸ்க்ரீன் டைம் போன்ற செயலிகளைப் பயன்படுத்தி, செல்போன் பயன்பாட்டைக் குறைக்க முயலலாம்.

  • தூங்க வரும்போது, உங்கள் செல்போனை வேறொரு அறையில் அல்லது படுக்கை அறையின் ஒரு மூலையில் வைக்கலாம்.

இதையெல்லாம் முயற்சித்துப் பார்த்துவிட்டு, முடியாமல் போனால், செல்போன் பயன்பாடு உங்கள் வாழ்க்கையை ஏதேனும் ஒரு வகையில் மோசமடையச் செய்கிறது என்பதை உணர்ந்தால் நிச்சயம் மருத்துவர்களின் ஆலோசனைப் பெறலாம்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest