
சேலம், திருமலைகிரி இடும்பன் வட்டம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் வெள்ளிப் பட்டறை தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் ஜீவானந்தம் இருவரும் வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, வேடுகத்தாம்பட்டி பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கும்பல் மோகன்ராஜ் மற்றும் அவரது நண்பர் ஜீவானந்தம் ஆகிய இருவரையும் கடந்த 16.09.2025 அன்று காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிந்ததன்பேரில் இரும்பாலை காவல்துறையினர் காயமடைந்த மோகன்ராஜ் மற்றும் ஜீவானந்தமாக இருவரையும் விரைந்து சென்று மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி மோகன்ராஜ் உயிரிழந்தார். மேலும் ஜீவானந்தம் என்ற இளைஞர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். மோகன்ராஜ் இறப்பிற்கு காரணமான நபர்களை கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக இரும்பாலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தொடர்புடைய 8 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோகன்ராஜ் மற்றும் ஜீவானந்தம் ஆகிய இருவரையும் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இரவு பூஜை நடந்தபோது, வேடுகத்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்த நபர்களுக்கும், மோகன்ராஜ் தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முன்பகை காரணமாக மோகன்ராஜ் மற்றும் அவரது நண்பர் ஜீவானந்தம் ஆகிய இருவரையும் காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கி உள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மோகன்ராஜ் உயிரிழந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட காளியப்பன், தங்கராஜ், செல்வம், இளங்கோ, சூர்யா, பிரகாஷ்,முருகன், கவினேஷ் ஆகிய எட்டு பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்புடைய மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.