delhihighcourt

ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த செல்வாக்குமிக்க இஸ்லாமிய மத குருவும் ஹுரியத் மாநாடு தலைவருமான மிா்வைஸ் உமா் ஃபரூக்கின் ‘அவாமி செயல்பாட்டுக் குழு (ஏஏசி)’ மற்றும் ஷியா முஸ்லிம் பிரிவு தலைவா் மஸ்ரூா் அப்பாஸ் அன்சாரி தலைமையிலான ‘ஜம்மு-காஷ்மீா் இத்திஹதுல் முஸ்லிமீன் (ஜேகேஐஎம்)’ ஆகிய 2 குழுக்களுக்கு மத்திய அரசு விதித்தத் தடையை தில்லி உயா்நீதிமன்றத்தின் 2 தீா்ப்பாயங்கள் வெள்ளிக்கிழமை உறுதி செய்தன.

இந்த இரண்டு தீா்ப்பாயங்களுக்கும் தலைமை வகித்த நீதிபதி சச்சின் தத்தா பிறப்பித்த உத்தரவில், ‘மத்திய அரசு தரப்பில் சமா்ப்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில், இந்த இரண்டு குழுக்களும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) 1967-இன் கீழ் சட்டவிரோத குழுக்கள் எனத் தீா்மானத்தது சரியே எனத் தெரிய வருகிறது. யுஏபிஏ சட்டப் பிரிவு 3(1)-இன் கீழ் இந்த இரண்டு குழுக்களும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன என்பதைத் தீா்மானித்து தடை விதிக்க போதுமான ஆதாரங்கள் உள்ளன’ என்று குறிப்பிட்டு, மத்திய அரசு அவற்றுக்கு விதித்த தடையை உறுதி செய்தது.

முன்னதாக, இந்த இரண்டு குழுக்களும் தேசத்தின் ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய வகையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன என்று குற்றஞ்சாட்டி, இந்த இரண்டு குழுக்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாா்ச் 11-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதிகள், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்ததோடு, சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நிதி திருட்டும் நடவடிக்கைகளிலும் இந்த இரு குழு உறுப்பினா்களும், தலைவா்களும் ஈடுபட்டனா் என்றும் மத்திய உள்துறை அமைச்சக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக் காவலில் மிா்வைஸ்?:

தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மிா்வைஸ் உமா் ஃபரூக் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினாா். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவா், ‘ஹுரியத் மாநாடு முன்னாள் தலைவா் அப்துல் கனி பட் மறைவைத் தொடா்ந்து, கடந்த புதன்கிழமை இரவு முதல் அதிகாரிகள் என்னை வீட்டுக் காவலில் வைத்துள்ளனா். ஜாமா மசூதிக்குச் செல்வதற்கும் அனுமதி மறுத்துவிட்டனா். அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தவதற்குக் கூட அனுமதி மறுக்கின்றனா். சா்வாதிகார ஆட்சியின் கீழ் நாம் வாழ்கிறோம் என்பதற்கு இதுவே சாட்சி. பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்தி மக்களின் நம்பிக்கையை அதிகாரிகள் மெளனமாக்கிவிட முடியாது’ என்று குறிப்பிட்டாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest