
பஞ்சாப் மாநிலத்திலுள்ள, சீக்கியர்களின் புனிதத் தலமான தங்கக் கோயிலுக்கு மூன்றாவது முறையாக, இன்று (ஜூலை 16) மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமிர்தசரஸ் மாவட்டத்தில், சீக்கியர்களின் புனிதத் தலமான, ஹர்மந்தீர் சாஹிப் என்றழைக்கப்படும் தங்கக் கோயிலுக்கு, தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் மின்னஞ்சல் மூலமாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கோயில் நிர்வாகத்துக்கு வந்த மின்னஞ்சலில், தங்கக் கோயிலின் பைப்புகளினுள் ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, உடனடியாக பாதுகாப்புப் படைகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, எல்லைப் பாதுகாப்புப் படையின், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மாநில காவல் துறையினர் அங்கு விரைந்து தீவிர சோதனைகள் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கக் கோயிலுக்கு வருகைத் தரும் சூழலில், வெடிகுண்டு மிரட்டல்களினால் அன்றாட வழிபாடுகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன.
ஏற்கனவே, கடந்த 2 நாள்களாக கோயில் வளாகத்தினுள் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ள சூழலில், கூடுதல் படைகள் அங்கு பணியமர்த்தப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள மர்ம நபர்களை அடையாளம் கண்டுபிடிக்க சைபர் கிரைம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தங்கக் கோயில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதால், அது குறித்து காவல் துறையினர் மற்றும் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: உத்தரகண்டில் உள்ளாட்சித் தேர்தல்! இந்தியா – நேபாளம் எல்லை மூடல்!