வினைகள் காரணமாகவே ஓர் ஆன்மாவுக்கு மீண்டும் மீண்டும் பிறப்பு நிகழ்கிறது. இந்த வினைகளே துன்பத்துக்கும் காரணமாகின்றன. துன்பங்கள் அதிகரிக்கும்போது வாழ்க்கை நரகமாகிவிடுகிறது. அதிலிருந்து நம்மைக் காத்து வழிநடத்த அந்த ஆண்டவனாலேயே முடியும்.
ஜாதகங்களில் காணப்படும் தோஷங்களில் முக்கியமானது பிரம்மஹத்தி தோஷம். இந்த தோஷம் இருந்தால் முயற்சிகளில் தடை காணப்படும். திறமை இருந்தும் பெரிய வளர்ச்சி இருக்காது. இல்வாழ்க்கையிலும் நிம்மதியற்ற தன்மை இருக்கும். இப்படிப் பலவிதமான கஷ்டங்கள் இருக்கும். இவற்றில் இருந்தெல்லாம் நிவாரணம் தரும் தலமாகத் திகழ்கிறது திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயில்.
மகிமைகள் இந்த ஆலயம் கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில், சுமார் 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு வந்து பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி செய்துகொண்டால் வாழ்க்கையே மாறும் என்கிறார்கள் பக்தர்கள்.

இங்கு சுவாமி அருள்மிகு மகாலிங்கேஸ்வரராக அருள்பாலிக்கிறார். இந்த ஈசனை அம்பாள், விநாயகர், முருகன் முதலாக சகல தேவர்களும் வந்து வழிபட்டு அருள் பெற்றுள்ளார்கள்.
ஆலயத்தைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர், சொக்கநாதர் ஆகியோரின் ஆலயங்கள் அமைந்திருக்க நடுவில் மகாலிங்கப் பெருமானின் கோயில் திகழ்கிறது. ஆகவே இத்தலத்தை பஞ்சலிங்கத் தலம் என்றும் போற்றுவர்.
சந்திரன், தன் 27 மனைவிகளோடும் இங்கு வந்து ஈசனை வழிபட்டுத் தன் சாபம் நீங்கப் பெற்றான். ஆகவே, இந்தத் திருத்தலம் சந்திரப் பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது.
சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ஏழு கோபுரங்கள், ஏழு பிராகாரங்கள், ஏழு கிணறுகளுடன் பிரமாண்டமாகத் திகழ்கிறது இந்த ஆலயம். 27 நட்சத்திர லிங்கங்கள், 12 ராசிகளைக் குறிக்கும் மகாமண்டபத் தூண்கள் முதலாக அநேக அற்புதங்களைத் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது இந்த ஆலயம்.
தல விருட்சம் மருத மரம். இதை தரிசிப்போருக்குப் பிணிகள் நீங்கும் என்பது ஐதிகம்.
ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் வலம் வந்தால், அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும். இடையில் உள்ள கொடுமுடிப் பிராகாரத்தை வலம் வந்து வழிபட்டால் புண்ணியம் கூடும். மூன்றாவதான பிரணவப் பிராகாரத்தில் வலம் வந்தால், பாவங்கள் விலகி மோட்சம் கிட்டும் என்கின்றது தலபுராணம்.
இங்கு பிள்ளையாரை ‘ஆண்ட விநாயகர்’ என்று போற்றுகிறார்கள். இவரை வணங்கி வழிபட்டால் பதவி கிடைக்கும் என்கிறார்கள்.

சுவாமி மகாலிங்கேஸ்வரர் சுயம்புமூர்த்தி. ஈசன் தன்னைத்தானே பூஜித்து, அதன் மூலம் சப்த ரிஷிகளுக்குச் சிவ பூஜா விதிகளைப் போதித்த தலம் இது. மார்க்கண்டேய மகரிஷிக்கு அர்த்தநாரீஸ்வர தரிசனம் கிடைத்த தலம் என்பதால், இங்கு வந்து வழிபட தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர்.
அம்பிகைக்கு இங்கே அருள்மிகு சுந்தரகுஜாம்பிகை என்பது திருநாமம். இந்த அன்னையை பெருநல முலையம்மை என்றும் போற்றுவர். அன்னையை வணங்கி வழிபட்டால் வீட்டில் மங்கலங்கள் பெருகும் என்பார்கள்.
கொல்லூருக்கு அடுத்து, இங்கு மட்டுமே மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. அசுரனை அழித்ததால், தோஷம் உண்டாக இங்கு வந்து ஈசனை வழிபட்டு நிவர்த்திபெற்றாளாம் மூகாம்பிகை. இங்கே, மகிஷாசூரனை மிதித்தப்படி காட்சிதரும் துர்கையின் திருக்கோலம் விசேஷ அம்சம் என்கிறார்கள்.
தோஷம் தீர்க்கும் வழிபாடு
வரகுண பாண்டியன் தன் பிரம்மஹத்தி தோஷம் நீங்க இத்தலத்துக்கு ஓடி வந்தான். கிழக்கு வாசல் வழியே நுழைந்து வழிபட்டுவிட்டு, மேற்கு வழியில் வெளியேறினானாம். அவனைத் துரத்தி வந்த பிரம்மஹத்தி கிழக்கு வாயிலிலேயே தங்கிவிட்டதாம். இதையொட்டி இன்றைக் கும் பக்தர்கள் இந்த ஆலயத்தின் கிழக்கு வாசல் வழியே நுழைந்து, வழிபாடு முடித்து மேற்கு வாயில் வழியே வெளியேறும் வழக்கம் தொடர்கிறது.
இந்தத் தலத்தில் மட்டுமே தினமும் காலை வேளைகளில் மூன்று முறை தோஷநிவர்த்தி பூஜை நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு தரிசித்தால், சகல பாவங்களும் தோஷங்களும் நீங்கி சிறப்பான வாழ்வைப் பெறலாம்.
தேவார மூவர், மாணிக்க வாசகர், பட்டினத்தார், கருவூரார், அருணகிரிநாதர், காளமேகப் புலவர் ஆகியோர் பாடிய தலம் இது. பத்திரகிரியார் முத்தி பெற்றதும் இங்குதான். இங்கு வந்து வழிபட்டதால் பட்டினத்தாருக்கு, இங்குள்ள ஈஸ்வர அம்சமே மகனாக – மருதவாணனாகப் பிறந்தது என்பார்கள்.
திருநாவுக்கரசர் பாடி அருளியபடி பூச நட்சத்திர நாளில் இங்கு வந்து வழிபடுவது சிறப்பு என்பார்கள். அதேபோல் அனுஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம் என்றும் கூறுவர்.







மனோ வியாதிகள் நீங்கும், திருமண வரம், குழந்தை வரம், வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு என சகல வரங்களையும் அருள்பவர் மகாலிங்க சுவாமி.
ராஜ அலங்காரத்தில் வீற்றிருக்கும் சாம்பவி தட்சிணாமூர்த்தி திருக்கோலம் அபூர்வமானது. இவரை வழிபட்டால் நீங்காத செல்வத்தையும் புகழையும் பெறலாம் என்பார்கள்.
சிவனருள் வேண்டுபவர்கள் கட்டாயம் வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசனம் செய்ய வேண்டிய தலமாகத் திகழ்கிறது திருவிடைமருதூர். சென்று வாருங்கள். வாழ்க்கையை மாற்றி வளமாக்குவார் அந்த மகாலிங்க ஈஸ்வரர்.