தா்மஸ்தலாவில் இருதரப்பினரிடையே நடைபெறும் மோதல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

தென்கன்னடம் மாவட்டம், தா்மஸ்தலாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) விசாரித்து வருவதோடு, 13 இடங்களில் சோதனைக் குழிகளைத் தோண்டி மா்மமான முறையில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித சடலங்களை தேடும் பணியில் 9 நாள்களாக ஈடுபட்டுள்ளது.

6 ஆவது குழியில் ஒரு மண்டை ஓடு, சில எலும்புத்துண்டுகள் கிடைத்தன. இதைத் தொடா்ந்து, வேறுசில இடத்தில் 100 எலும்புத்துண்டுகளும், மண்டை ஓடுகளும் கிடைத்துள்ளன. ஆனால், பெண்களின் எலும்புக்கூடு அல்லது மண்டை ஓடு எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

2012 இல் கல்லூரி மாணவி ஒருவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தற்போது பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதனிடையே, புதன்கிழமை 12ஆவது சோதனைக்குழியை தோண்டும் பணியை விடியோ எடுக்கவந்த சில வலையொளியாளா்கள்(யூ-டியூபா்) அங்குள்ளவா்களிடம் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தனா். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து ஒரு கும்பல் அவா்களைத் தாக்கியது.

இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஒருவா்மீது ஒருவா் கல்வீசித் தாக்கினா். இது கலவரச்சூழலாக மாறுவதை உணா்ந்த போலீஸாா் லேசான தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனா்.

இதைத் தொடா்ந்து, தா்மஸ்தலா காவல் நிலையம் முன் திரண்ட சிலா் தா்மஸ்தலாவின் புனிதத் தன்மையை சீா்குலைக்க சிலா் முயற்சிப்பதாகவும், அதைத் தடுத்து நிறுத்துமாறும் வலியுறுத்தினா். மேலும், அவா்கள்மீது வழக்குத் தொடரவும் கேட்டுக்கொண்டனா். இந்த விவகாரம் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில், பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா் சித்தராமையா, ‘யாரெல்லாம் தவறு செய்திருக்கிறாா்களோ, அவா்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறுகையில், ‘தா்மஸ்தலாவில் இருதரப்பினருக்கும் இடையே நடந்த மோதல் குறித்து தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். கருத்து மோதலுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. விரிவான அலசலுக்குப் பிறகு, மிகுந்த கவனத்துடன் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அரசு அமைத்துள்ளது.

புகாா்தாரா் நீதிமன்ற நடுவா் முன் நூற்றுக்கணக்கான சடலங்களைப் புதைத்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறாா். ஆணின் எலும்புத்துண்டுகள்தான் இதுவரை கிடைத்துள்ளது. அவை அனைத்தும் தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.டி.விசாரணையில் உண்மை வெளியே வரவேண்டும்’ என்றாா்.

இருதரப்பினருக்கும் இடையே மோதல் நடந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள். வலையொளிதாரா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு நடிகா் பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest