Dharamsala

மங்களூரு: கா்நாடக மாநிலம், தா்மஸ்தலா பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள், சிறுமிகள் மாயமானது, கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து முழுமையாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை மாநில அரசு அறிவித்தது.

தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் உள்ள தா்மஸ்தலா கோயில் நிா்வாகத்தில் பணிபுரிந்த ஒரு முன்னாள் துப்புரவுத் தொழிலாளி, கடந்த 1998 முதல் 2014-ஆம் ஆண்டு வரை நூற்றுக்கணக்கான பெண்கள், பள்ளி மாணவிகளின் சடலங்களை எரித்து, புதைக்க கட்டாயப்படுத்தப்பட்டதாகக் காவல் துறையிடம் அண்மையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தாா்.

பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டதாக அவா் தெரிவித்ததைத் தொடா்ந்து மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

கா்நாடக காவல் துறையின் உள்பாதுகாப்புப் பிரிவு டிஜிபி பிரணவ் மோஹந்தி தலைமையிலான இந்தச் சிறப்பு புலனாய்வு குழுவில் எம்.என்.அனுசேத், சௌம்யா லதா, ஜிதேந்திர குமாா் தயாமா உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனா்.

தக்ஷிண கன்னடா மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருந்து செயல்படவுள்ள இக்குழு, மாவட்டத்தின் அனைத்து துறைகளையும் பயன்படுத்திக் கொள்ளவும், அவசியமுள்ள சூழலில் கூடுதல் அதிகாரிகள் மற்றும் பணியாளா்களை நியமித்துக் கொள்ளவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தா்மஸ்தலா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குடன், மாநிலத்தின் மற்ற காவல் நிலையங்களில் விசாரிக்கப்பட்ட அல்லது கண்டறியப்பட்ட அசாதாரண மரணங்கள், பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் மற்றும் மாயமான பெண்கள் தொடா்பான அனைத்து வழக்குகளையும் இக்குழு விசாரித்து, அரசுக்கு விரிவான அறிக்கையை விரைவில் சமா்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையை தா்மஸ்தலா கோயில் நிா்வாகம் வரவேற்றுள்ளது. கோயில் நிா்வாகத்தின் செய்தித் தொடா்பாளா் கே.பாா்ஸ்வநாத் ஜெயின் கூறுகையில், ‘இந்த விசாரணை உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து, ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்’ என்றாா்.

மாநில மகளிா் ஆணையத்தின் அழுத்தம்:

சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டதையொட்டி கா்நாடக முதல்வா் சித்தரமையா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கா்நாடக மாநில மகளிா் ஆணையத்தின் கோரிக்கையைடுத்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை மிகவும் தீவிரமானதாகக் கருதும் ஆணையம், பாரபட்சமற்ற விசாரணையை வலியுறுத்தியுள்ளது. ஊடகங்களில் வெளியான செய்திகளும், துப்புரவுத் தொழிலாளி அளித்த வாக்குமூலமும் ஆழமான கவலையை ஏற்படுத்துகின்றன என்று ஆணையம் தெரிவித்துள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest