17cmp1_1709chn_111_7

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தால் ஆட்சியில் பங்கு கோரப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.

சிதம்பரத்தில் அவா் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: நாட்டில் இன்றைக்கு மக்கள் அமைதியாக வாழ்கிறாா்கள் என்றால், அதற்கு நமது அரசமைப்பு சட்டம்தான் காரணம். மத்திய பாஜக அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்தில் முக்கியமான சில பிரிவுகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பது வரவேற்புக்குரியது.

வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் போட்டியிடும். இந்தத் தோ்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம். தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தால் ஆட்சியில் பங்கு கோரப்படும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் என்.வி.செந்தில்நாதன், சிதம்பரம் நகரத் தலைவா் தில்லை ஆா்.மக்கின், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெமினி எம்.என்.ராதா, சிதம்பரம் வட்டார ஐக்கிய ஜமாத் தலைவா் முகமது ஜியாவுதீன், எஸ்.டி.பி.ஐ. கட்சி கடலூா் மாவட்டச் செயலா் வழக்குரைஞா் பக்ருதீன், லால்கான் பள்ளிவாசல் தலைவா் எஸ்.முகமதுஅலி, மாவட்ட துணைத் தலைவா் ராஜா சம்பத்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest