1001030725

ராஜபாளையத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 7 அன்று விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதிக்கு பரப்புரை செய்வதற்காக வர உள்ளார். அப்போது ஒரு சில இடங்களில் மக்களை நேரில் சந்தித்து பேச உள்ளர்.

இந்த பரப்புரையை சிறப்பாக நடத்துவது குறித்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் ராஜபாளையத்தில் நடைபெற்றது.

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி பேச்சு:

இந்தக் கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி, “கடந்த 2021 தேர்தலில் நான் ராஜபாளையம் தொகுதியில் வெற்றியை பறிகொடுத்தது ஒரு விபத்து. சிலர் என்னை ஏமாற்றி விட்டனர்.

தற்போது அவர்கள் களை எடுக்கப்பட்ட செழிப்பான பயிராக வலுவாக ராஜபாளையத்தில் அதிமுக உள்ளது. இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் கடை கோடி தொண்டன் நின்றாலும் வெற்றி பெறுவான். தற்போது வரும் அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் ராஜபாளையம் தொகுதியில் அதிமுக பலமாக இருப்பதாக கூறுகிறது.

திமுக உறுப்பினர் சேர்க்கை

திமுக குறைவாக திருடி இருந்தால் தப்பி இருக்கலாம். மூட்டை, மூட்டையாக திருடி இருக்கிறார்கள். சரியான கட்டத்தில் மாட்டிக் கொண்டதால் திமுக தப்பிக்க வழியே இல்லை.

கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆண்டாண்டு காலமாக பின்பற்றி வந்த மரபை மீறி திமுக வீடு வீடாகச் சென்று கேவலப்பட்டு அசிங்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கை நடத்துகிறார்கள். 35 வயதுக்கு உள்பட்ட உறுப்பினர்கள் திமுகவில் யாருமே இல்லை. முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள், 35 வயதுக்கு உள்பட்டவர்கள் அனைவரும் அதிமுகவில் உள்ளனர்.

ராஜேந்திர பாலாஜி

`அந்த வண்டி ஓட வாய்ப்பு இல்லை..’

திமுக பாடி போன லாரி, டயர் போன பேருந்து. இதனால் அந்த வண்டி ஓட வாய்ப்பு இல்லை. அதிமுக வண்டி அற்புதமானது. மாலுமியாக இருக்கக்கூடிய இபிஎஸ் தெளிவாக வண்டியை ஒட்டிச் செல்கிறார். இதை கேலி செய்த முதல்வருக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் திமுகவிடம் ஏமாறுவதற்கு தயாராக இல்லை. மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செய்தது அதிமுக ஆட்சி. திமுக ஆட்சியில் எதுவும் செய்யாததால் அதிமுகவை பாஜகவின் அடிமை என முதல்வர் ஸ்டாலின் தூற்றுகிறார்.

கடந்த 1999 ஆம் ஆண்டு திமுக – பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த போது பாஜக மதவாத கட்சி என திமுகவுக்கு தெரியவில்லையா?.

`பாஜக பலமான கட்சி, அதிமுக மிக பலமான கட்சி’

பாஜக பலமான கட்சி, அதிமுக மிக பலமான கட்சி. அடித்தளம் பலமாக இருக்கும் இரண்டு கட்சிகளும் இணைந்தால் ஆட்சியைப் பிடித்துவிடும் என்ற பயத்தால் பாஜகவை தீண்ட தகாத கட்சியாக முதல்வர் பிரகடனப்படுத்துகிறார்.

அவரது ஓரங்க நாடகம் தமிழ்நாட்டில் எடுபடாது. இபிஎஸ்-சின் எதார்த்தமான பேச்சை தான் மக்கள் விரும்புகிறார்கள். திமுகவின் நாடக அரசியலை மக்கள் விரும்பவில்லை. கொரோனா காலத்திலும் நியாய விலை கடைகளில் பொது மக்களுக்கு தேவையான அனைத்து உணவு பொருள்களும் தடையின்றி வழங்கப்பட்டது.

ராஜேந்திர பாலாஜி

`கேரளாவுக்கு அரிசி கடத்தல்’

இன்று நியாய விலை கடைகளில் உணவுப் பொருள்கள் எதுவும் மக்களுக்கு கிடைப்பதில்லை. ஆளும் அதிகாரத்தில் இருப்பவர்கள் நியாய விலை கடைக்குச் செல்ல வேண்டிய அரிசியை கேரளாவுக்கு கடத்துகின்றனர்.

அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடத்தல்காரர்கள் அனைவரும் சிறைக்கு செல்ல உள்ளனர். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பயணத்தை இபிஎஸ் தொடங்கியுள்ளார். இந்த பயணம், பரப்புரை ராஜபாளையத்தில் மிக சிறப்பாக நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என பேசினார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest