
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த தவெக தலைவர் விஜய், சாலை வழியாக நாகப்பட்டினத்துக்கு காரில் புறப்பட்டார்.
நாகப்பட்டினம் எல்லையில் விஜய்யை வரவேற்க தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் இன்று மக்கள் சந்திப்பு பிரசாரத்தை தவெக தலைவா் விஜய் மேற்கொள்ளவிருக்கிறாா்.
இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானத்தில் புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வந்தார். அங்கிருந்து கார் மூலம் நாகப்பட்டினத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
திருச்சியில் கடந்த வாரம் பிரசாரம் மேற்கொள்ள விஜய் வருகை தந்தபோது, விமான நிலையத்துக்குள் தொண்டர்கள் குவிந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று திருச்சி விமான நிலையத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, விஜய்யை வரவேற்க வந்த தொண்டர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதனிடையே, திருச்சியில் இருந்து ஈசிஆர் சாலையில் வாஞ்சூர் வழியாக நாகை செல்ல விஜய் திட்டமிட்டிருந்த நிலையில், திடீர் மாற்றமாக தஞ்சாவூர் புறவழிச் சாலையில் நாகை செல்கிறார்.
வாஞ்சூரில் விஜய்யை வரவேற்க நூற்றுக்கணக்கான தொண்டர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், திருவாரூர் வழியாக நாகை சென்றால், வாஞ்சூர் திட்டம் கைவிடப்படும் எனத் தெரிகின்றது.
நாகப்பட்டினம், புத்தூர் ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே இன்று நண்பகல் 12.30 மணியளவிலும், திருவாரூர் தெற்கு வீதியில் பிற்பகல் 3 மணியளவிலும் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
விஜய்யின் வருகையை ஒட்டி, நாகப்பட்டினத்தில் காலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.