
வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு வயதுக் குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
வெல்கம் பகுதியருகே இன்று காலை 7.04 மணியளவில் நான்கு மாடிக்கட்டடம் இடிந்து விழுந்ததாகக் காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு போலீஸார் குழு வந்தடைந்தபோது, கட்டடத்தின் மூன்று அடுக்கு இடிந்து விழுந்ததைக் கண்டனர். இந்த விபத்தில் 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அதில் ஏழு பேர் ஜேபிசி மருத்துவமனைக்கும், ஒருவர் ஜிடிபி மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கட்டடத்தின் உரிமையாளர் மத்லூப் தனது குடும்பத்தினருடன் கட்டடத்தில் வசித்து வருவதாக தகவல் கிடைத்தது. தரைதளம் மற்றும் முதல் தளத்தில் உள்ள வீடுகள் காலியாக இருந்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
கட்டடம் இடிந்து விழுந்தபோது அதிலிருந்து பர்வேஸ் (32), அவரது மனைவி சிசா (21), அவரது மகன் அகமது (14 மாதங்கள்) மற்றும் அவரது சகோதரர் நவேத் (19) ஆகியோர் மீட்கப்பட்டுள்ளனர்.
கட்டடத்திற்கு வெளியே இருந்த கோவிந்த் (60), அவரது சகோதரர் ரவி காஷ்யப் (27), அவர்களது மனைவிகள் தீபா (56) மற்றும் ஜோதி (27) ஆகியோரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.
இடிந்து விழுந்த கட்டடத்திற்கு எதிரே உள்ள கட்டடத்தில் வசிக்கும் அனீஸ் அகமது அன்சாரியும் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கட்டடத்தில் மேலும் சிலர் சிக்கியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மீட்பு நடவடிக்கைகளுக்காக 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகத் தில்லி தீயணைப்பு சேவைத் தலைவர் அதுல் கார்க் தெரிவித்தார்.