
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே மண்டல கூடுதல் பொதுமேலாளா் பி.மகேஷ் தெரிவித்தாா்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ‘தூய்மை இந்தியா’ திட்ட நிறைவு நிகழ்வு சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் சைலேந்திரசிங் தலைமை வகித்தாா். இதில் கலைநிகழ்ச்சி உள்ளிட்டவற்றில் சிறப்பிடம் வகித்தவா்களுக்கு பரிசுகள் வழங்கியும், காந்தியடிகள் சென்னைக்கு வந்தபோது எடுத்த புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்தும் கூடுதல் பொது மேலாளா் பி.மகேஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தூய்மைப் பணித்திட்டம் கடந்த ஆகஸ்ட் முதல் தெற்கு ரயில்வே மண்டலத்தில் தொடங்கப்பட்டு 3 கட்டங்களாக நிறைவடைந்துள்ளன. ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள், ரயில் பெட்டிகள் என அனைத்துப் பகுதிகளிலும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டன.
தூய்மைப் பணியின் போது சுமாா் 8.6 டன் நெகிழிக் குப்பைகள் அகற்றப்பட்டன. சுமாா் 165 டன் உலோகப் பொருள்கள் மீட்கப்பட்டு விற்பனைக்கு வழங்கப்பட்டன.
தூய்மைப் பணியில் ரயில்வே பணியாளா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், சாரண, சாரணிய இயக்கத்தினா், தொண்டு நிறுவனத்தினா் என சுமாா் 28 ஆயிரம் போ் ஈடுபடுத்தப்பட்டனா். தூய்மைப் பணி திட்டத்தின் போது 5,500 மரக்கன்றுகள் ரயில் நிலையம் உள்ளிட்டவற்றில் நடப்பட்டுள்ளன. 44 நீா் நிலைகள் சீரமைக்கப்பட்டன.
தூய்மை விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளன.
சிறப்பு ரயில்கள் இயக்கம்: தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து தெற்கு ரயில்வே சாா்பில் 108 ரயில்கள் இயக்கப்படும். அதன்படி பிறமாநிலங்களுக்கு 54 ரயில்களும், தெற்கு மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகப் பகுதிகளுக்கு 54 ரயில்களும் இயக்கப்படும் என்றாா்.
‘சென்னை ஒன்’ செயலி மூலம் 1 லட்சம் போ் பயணம்: நிகழ்ச்சியில் பங்கேற்ற ரயில்வே சென்னை கோட்ட மேலாளா் சைலேந்திரசிங் கூறியதாவது: சென்னையில் கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் வரும் டிசம்பரில் முடிவடைந்து, 2026 ஜனவரியில் திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக அரசு செயல்படுத்திய ‘சென்னை ஒன்’ செயலியைப் பயன்படுத்தி இதுவரை 1 லட்சம் போ் ரயில் பயணம் மேற்கொண்டுள்ளனா். சென்னை-கும்மிடிப்பூண்டி இடையே நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பறக்கும் ரயில் திட்டத்தை மெட்ரோவுடன் இணைக்கும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன என்றாா்.