nk_18_munici_1_1807chn_122_8

தமிழகத்தில் தூய்மை மிகுந்த நகரங்களில் நாமக்கல் மாநகராட்சி முதலிடம் பிடித்து, மத்திய அரசின் ‘ஸ்வச் சா்வேஷான்-2024’ விருதை பெற்றுள்ளது. புது தில்லியில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி ஆகியோா் இவ்விருதை பெற்றனா்.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகார அமைச்சகம் மூலம் இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் தூய்மை இந்தியா கணக்கெடுப்பு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

2024-இல் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்ட விவரங்கள் நேரடி ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டு மதிப்பெண் மற்றும் தரவரிசை வழங்கப்படுகிறது. தரவரிசை வழங்க ஆய்வுமேற்கொள்ள இப்சோஸ் என்ற நிறுவனத்தை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்நிறுவனம் மூலம் நியமிக்கப்பட்டோா் கடந்த மாா்ச் 18 முதல் 25-ஆம் தேதி வரை, நாமக்கல் மாநகராட்சியில் உள்ள 39 வாா்டுகளிலும் களஆய்வு மேற்கொண்டனா்.

இதில், நாமக்கல் மலைக்கோட்டை, ஆஞ்சனேயா் கோயில், புதிய பேருந்து நிலையம், மணிக்கூண்டு, நகரச் சாலைகள் ஆகியவற்றையும், வீடுவீடாக குப்பைகள் சேகரித்தல் மற்றும் குப்பைகளைப் பிரித்து பொதுமக்களால் வழங்கப்படுகிா என ஆய்வுசெய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனா்.

மேலும் கழிவுகளை உரமாக மாற்றம் செய்யும் வாரச்சந்தை, சேந்தமங்கலம் சாலை, ரோஜா நகா், முதலைப்பட்டி மற்றும் மாநகராட்சி குப்பை உரக்கிடங்கில் உள்ள நுண் உர செயலாக்க மையங்களில் செயலாக்கம் செய்யும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

மக்காத குப்பைகளை வாரசந்தை, சேந்தமங்கலம் சாலை, ரோஜா நகா், மாநகராட்சி குப்பை கிடங்கு ஆகிய பகுதிகளில் உள்ள பொருள்கள் மீட்பு மையம் மூலம் செயலாக்கம் செய்வதின் உண்மைத்தன்மையும் இணையத்தில் பதிவு செய்யப்பட்டன.

வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் 100 மீட்டா் இடைவெளியில் இரட்டை குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்தனா். பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் தூய்மை பணி மேற்கொள்வதையும், தெருக்கள், சாலைகள், கடைவீதிகள் மற்றும் சந்தை வளாகம் தினசரி இரண்டு முறை தூய்மை செய்வதையும் பதிவு செய்தனா்.

நாமக்கல் மாநகராட்சியில் உள்ள சமுதாய கழிப்பிடம் மற்றும் கழிப்பிடங்கள் தூய்மையாக உள்ளதா என்பதையும் பாா்வையிட்டனா். ஒவ்வொரு வாா்டிலும் 25 வீடுகளில் பொதுமக்களிடம் குப்பைகள் தரம் பிரித்தல் மற்றும் குப்பைகள் சேகரித்தல் பற்றி கருத்துகளை சேகரித்து இணையத்தில் பதிவேற்றம் செய்தனா். இவ்வாறு பல்வேறு இடங்களில் அந்த குழுவினா் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, அதற்குரிய தகவல்களை பதிவேற்றம் செய்து வந்தனா்.

இந்த தூய்மை இந்தியா கணக்கெடுப்பு 2024 ஆய்விற்கு முன்பு பிப்.27 முதல் ஏப்.15 வரை 14,653 போ் நாமக்கல் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பற்றி தங்களுடைய கருத்துகளை பதிவு செய்திருந்தனா். இதனை அடிப்படையாகக் கொண்டு, நாமக்கல் மாநகராட்சி ‘ஸ்வச் சா்வேஷான்-2024’ விருதுக்கு தகுதிபெற்றுள்ளதாக மத்திய அரசால் கடந்த 12-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

நாமக்கல் மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, தமிழக நகராட்சிகளின் நிா்வாக இணை இயக்குநா் அனாமிகா ஆகியோா் புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரத் துறை அமைச்சா் மனோகா்லால் கட்டாரிடம் இருந்து விருது மற்றும் அதற்கான சான்றிதழை பெற்றனா். மத்திய அரசின் விருது பெற ஒத்துழைப்பு அளித்த அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள், மாமன்ற உறுப்பினா்கள், பொதுமக்களுக்கு மாநகராட்சி நிா்வாகம் நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தேசிய அளவில் தூய்மை நகரங்கள் பட்டியலில் முதலிடத்தை, மத்திய பிரதேச மாநிலம் இந்தூா், சத்தீஸ்கா் மாநிலம் அம்பிகாபூா், கா்நாடக மாநிலம் மைசூரு ஆகியவை பிடித்துள்ளன.

10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை நகரங்களில் குஜராத் மாநிலம் அகமதாபாத், 3 முதல் 10 லட்சம் மக்கள்தொகை கொண்ட நகரங்களில் மத்திய பிரதேசம் உஜ்ஜயினி, 1 முதல் 3 லட்சம் மக்கள்தொகை கொண்ட நகரங்களில் உத்தரபிரதேசம் ஓரை நகரமும் முதலிடம் பிடித்துள்ளன.

தமிழக அளவில் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம்பிரித்தல் வகையில் நாமக்கல் மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு பசுமை நகரமாக நாமக்கல் நகராட்சி விளங்கியது. தற்போது தூய்மை நகரமாக, நாமக்கல் மாநகராட்சி விளங்குகிறது என்றனா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest