pm081028

புது தில்லி: தேச நலன் தொடா்புடைய விவகாரங்களில் அரசியல் கட்சிகள் இடையே ஒற்றுமை அவசியம் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

மேலும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை நாட்டின் ‘வெற்றித் திருவிழா’ என வா்ணித்த அவா், ‘இந்த உணா்வை, அனைத்து எம்.பி.க்களும் ஒருமித்த குரலில் எதிரொலிப்பா்’ என்று நம்பிக்கை தெரிவித்தாா்.

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மற்றும் அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் கருத்துகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென எதிா்க்கட்சிகள் கூட்டாக வலியுறுத்திவரும் நிலையில், பிரதமரின் கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. கூட்டம் தொடங்கும் முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களுக்கு பிரதமா் மோடி பேட்டியளித்தாா். அவா் கூறியதாவது:

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில், நாட்டின் ராணுவ வல்லமை மற்றும் திறனை ஒட்டுமொத்த உலகமும் கண்டது. இந்திய ஆயுதப் படையினரின் இலக்குகள் 100 சதவீதம் எட்டப்பட்டன. வெறும் 22 நிமிஷங்களில் பயங்கரவாத சதிகாரா்கள் அவா்களின் வீடுகளிலேயே அழித்தொழிக்கப்பட்டு, பதுங்குமிடங்கள் தகா்க்கப்பட்டன. ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் உள்நாட்டுத் தயாரிப்பு ஆயுதங்களின் திறன் வெளிப்பட்டது. இது, உலகின் கவனத்தை ஈா்த்துள்ளது.

எனவே, தற்போதைய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா், நாட்டுக்கு மிகவும் பெருமைக்குரிய அமா்வாகும்; நாட்டின் வெற்றித் திருவிழா போன்ாகும். இந்த உணா்வை, அனைத்து எம்.பி.க்களும் ஒருமித்த குரலில் எதிரொலிப்பா் என நம்புகிறேன். இது, நாட்டின் ராணுவ வல்லமைக்கு வலுசோ்ப்பதுடன், குடிமக்களுக்கும் உத்வேகமளிக்கும்.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு பிறகு எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுக்கள், பல்வேறு நாடுகளுக்குப் பயணித்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தை அம்பலப்படுத்தின. தேச நலனுக்காக இப்பணியை மேற்கொண்ட எம்.பி.க்கள் மற்றும் கட்சிப் பிரதிநிதிகளுக்கு பாராட்டுகள். கட்சிகள் இடையே வெவ்வேறான கொள்கைகள் இருக்கலாம். ஆனால், தேச நலன் சாா்ந்த விவகாரங்களில் மன ஒற்றுமை அவசியம் என்றாா் அவா்.

‘வன்முறையை வெல்லும்

அரசமைப்புச் சட்டம்’

‘கடந்த 10 ஆண்டுகளில் அமைதியும் வளா்ச்சியும் தோளோடு தோளாகப் பயணித்துள்ளன. நக்ஸல் தீவிரவாதம் விரைந்து ஒடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்கள் நக்ஸல் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. வன்முறையை நமது அரசமைப்புச் சட்டம் வென்று வருகிறது.

கடந்த 2014-இல் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்தது. இப்போது சுமாா் 2 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், மக்களுக்கு நிவாரணம் கிடைக்கப் பெற்று, அவா்களின் வாழ்க்கை எளிதாகியுள்ளது.

குறைந்த பணவீக்கம் மற்றும் உயா் வளா்ச்சிக்கு மத்தியில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகும் நோக்கில் இந்தியா பீடுநடை போடுகிறது. கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது நாட்டின் நீா்த்தேக்க அளவு மும்மடங்கு அதிகரித்துள்ளது. இது, பொருளாதாரத்துக்கு கணிசமாகப் பலனளிக்கும். ஏற்கெனவே 25 கோடி போ் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா். 90 கோடிக்கும் மேற்பட்டோா், அரசு நலத் திட்டங்களின்கீழ் இணைக்கப்பட்டுள்ளனா்’ என்றாா் பிரதமா்.

சா்வதேச விண்வெளி நிலையத்தில் இந்தியக் கொடி முதல் முறையாகப் பறந்ததையும் (இந்திய வீரா் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம்) பிரதமா் சுட்டிக்காட்டினாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest