aishwarya17478467483951757400169340

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்களை அவரது அனுமதி இல்லாமல் சிலர் சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றனர். அவரது புகைப்படத்தை ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் மாற்றி அதனை டிசர்ட், கப் போன்றவற்றில் கூட பயன்படுத்துகின்றனர். சிலர் ஐஸ்வர்யா ராய் படங்களை ஆபாச நோக்கிலும் பயன்படுத்துகின்றனர். இது தனது தனியுரிமைக்கு எதிராகவும், தனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கிறது என்றும், தனது புகைப்படங்களை எந்த வகையிலும் பயன்படுத்த தடை விதிக்கவேண்டும் என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ராய் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

குறிப்பாக ஆன்லைனில் தனது பெயர் மற்றும் புகைப்படங்கள் அதிக அளவில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டு இருந்தார். ஏ.ஐ. மற்றும் டீப்ஃபேக் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தனது புகைப்படத்தை கொண்டு ஆபாச வீடியோக்களை தயாரித்து வெளியிடுவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இம்மனு நீதிபதி தேஜஸ் காரியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நீதிபதி உடனடி நிவாரணமாக நடிகை ஐஸ்வர்யா ராய் படங்களை பயன்படுத்த தடை விதித்து இருக்கிறார்.

இது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், நடிகை ஐஸ்வர்யா ராயின் பெயர், புகைப்படங்கள், தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் படங்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்படுகிறது. அவரது அடையாளத்தை அவரது அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது சம்பந்தப்பட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அவர் அங்கீகரிக்கிறார் அல்லது ஆதரிக்கிறார் என்று மக்கள் தவறாக நினைக்கக்கூடும்.

ஒருவரின் தனிப்பட்ட உரிமைகள், படங்கள், பெயர், அவர் படம் போன்ற உருவங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட நபருக்கு உரிமை இருக்கிறது. அவற்றை தவறாக பயன்படுத்துவது அவரது கண்ணியத்தை பாதிக்கிறது. எனவே முன்பின் தெரியாதவர்கள் “ஐஸ்வர்யா ராய் பச்சன்”, அதன் சுருக்கமான “ARB”, அவரது படம், ஐஸ்வர்யா ராய் போன்ற படங்களை வணிக ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவதை கோர்ட் தடைசெய்தது.

இந்த உத்தரவு அனைத்து ஊடகம், AI, டீப்பேக், ஃபேஸ் மார்ஃபிங் மற்றும் இயந்திர கற்றல் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பங்களுக்கும் பொருந்தும். இவ்வழக்கில் ஐஸ்வர்யா ராய் தொடர்புடைய URLகளை 72 மணி நேரத்திற்குள் கூகுள் நிறுவனம் அகற்ற வேண்டும். ஏழு நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட URLகளை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தடை செய்யவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தியாவில் பிரபல நடிகையாக இருக்கும் மனுதாரரின் பெயர் மற்றும் படங்களை தவறாக பயன்படுத்துவது அவரது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதோடு வருவாய் இழப்பையும் ஏற்படுத்தும் என்று நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. ஐஸ்வர்யா ராய் கணவர் நடிகர் அபிஷேக் பச்சனும் இது போன்ற ஒரு மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருக்கிறார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest