
சென்னை: கடந்த திங்கள்கிழமை (ஜூலை 21) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பினார். இதனிடையே, நலம்பெற்று வீடு திரும்பினேன் என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
லேசான தலைசுற்றல் காரணமாக மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில், அடுத்த 3 நாள்கள் அவா் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தினா். இதனால் அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.
இருப்பினும் மருத்துவமனையில் இருந்தபடியே தொடர்ந்து கட்சி மற்றும் அலுவல் பணிகளை முதல்வர் மேற்கொண்டு வந்தார்.
இதனிடையே, கட்சி உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும் போது, மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை!
உயிராக நம்மை இயக்கும் கட்சியின் களச்செயல்பாடுகள் குறித்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் ஆலோசித்தபோது, உறுப்பினர் சேர்க்கையில் 150 தொகுதிகளில் நம் இலக்கை எட்டிய இன்பச் செய்தியை அவர்கள் பகிர, ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி உற்சாகம் பெற்றேன்! என எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை முடிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்ப உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது 7 மணியளவில் வீடு திருப்பினார்.


நலம்பெற்று வீடு திரும்பினேன்
இதனிடையே, நலம்பெற்று வீடு திரும்பினேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அக்கறையுடன் விசாரித்து, நலம் பெற வாழ்த்திய அனைத்து அரசியல் இயக்கத் தலைவர்கள் – மக்கள் பிரதிநிதிகள் – நீதியரசர்கள் – அரசு அதிகாரிகள் – திரைக் கலைஞர்கள் – என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சையளித்து, நான் விரைந்து நலம்பெற உறுதுணையாய் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் அன்பும், நன்றியும்!
உங்களுக்காக உழைப்பை வழங்கும் என் கடமையை என்றும் தொடர்வேன்! என எக்ஸ் பக்கத்தில் கூறிப்பிட்டுள்ளார்.