
நாகப்பட்டினம் பிரசாரத்துக்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றார்.
இதனிடையே, நாகப்பட்டினத்தில் விஜய்யை வரவேற்க தவெக தொண்டர்கள் அதிகாலை முதலே குவிந்து வருவதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
தவெக தலைவா் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை கடந்த செப். 13-ஆம் தேதி திருச்சியில் தொடங்கினாா். தொடா்ந்து வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா். அதன்படி, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.
நாகப்பட்டினம், புத்தூர் ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே இன்று நண்பகல் 12.30 மணியளவில் விஜய் உரையாற்றவுள்ளார். அரைமணிநேரம் மட்டுமே காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து திருவாரூர் செல்லும் விஜய், தெற்கு வீதியில் பிற்பகல் 3 மணிக்கு மேல் பிரசாரம் செய்யவுள்ளார்.
இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் செல்லும் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக நாகப்பட்டினம் செல்லவுள்ளார்.
திருச்சி பிரசாரத்தின் போது, விமான நிலையத்தில் இருந்து மரக்கடை செல்லும் சாலை முழுவதும் தொண்டர்கள் குவிந்ததால், 15 நிமிடத்தில் செல்ல வேண்டிய பகுதிக்கு 4 மணிநேரத்துக்கு மேல் ஆனது.
தற்போது நாகையிலும் தொண்டர்கள் குவிந்து வருவதால், சாலை மார்க்கமாக செல்லும் விஜய், குறிப்பிட்ட நேரத்தில் பிரசாரத்தை மேற்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாகை சாலைகளில் மட்டுமல்லாமல், கடற்கரைகளில் படகுகள் மூலமும் விஜய்க்கு வரவேற்ப அளிப்பதற்காக தவெகவினர் தயாராகி உள்ளனர்.