ajays-3

“மிசாவில் உங்களை கைது செய்தவர்களுடன் நீங்கள் கூட்டணி வைக்கலாம்.. நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் என்ன தவறு” என்று ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் சுற்றுப்பயணம் தொடங்கினார்.

மாலை அவரின் சுற்றுப்பயணத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எல். முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி – எஸ்.பி.வேலுமணி

எடப்பாடி பழனிசாமி பிரசார பேருந்தில் ரோட்ஷோவாக வந்தார். பிறகு அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் சிறிது தூரம் நடந்து சென்றார்.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே சூழ்ந்திருந்த மக்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மக்கள் வெள்ளத்தில் நீந்தி இங்கு வந்துள்ளேன். அதிமுக – பாஜக கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலில் இமாலய வெற்றி பெறும். தீய சக்தி திமுக-வை அகற்றுவோம். திமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்ததா இல்லையா. நீங்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்தபோது மதவாத கட்சி இல்லை. நாங்கள் கூட்டணி அமைத்தால் மட்டும் பாஜக மதவாத கட்சியா.

மத்தியில் பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சியை கொடுத்து கொண்டிருக்கிறார். பாஜக மதவாத கட்சி, தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை என திமுக மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. 16 ஆண்டுகாலம் திமுக, மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்து மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அவர்களின் குடும்பத்தாருக்கு பதவி மட்டுமே வாங்கினர். இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. ஸ்டாலினின் கனவு பகல் கனவாக மாறும்.

பிரசாரம்

அதிமுக பொற்கால ஆட்சி கொடுத்தது. விலைவாசி, வரி உயர்வு இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். திமுக வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது. மக்கள் உங்களுக்கு பாடம் எடுப்பார்கள். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. சிறுமி முதல் பாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். யாருக்கும் பாதுகாப்பு இல்லை. ஸ்டாலின் பொம்மை முதல்வராக இருக்கிறார்.

காவல்நிலையத்துக்கு போகவே மக்கள் பயப்படுகிறார்கள். திமுக நிறைவேற்ற முடியாத 525 வாக்குறுதிகளை கொடுத்து, 15% வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது. அத்தனையும் பொய் அறிவிப்பு. அதிமுக கொண்டு வந்த நல்ல திட்டங்களை எல்லாம் முடக்கியதுதான் திமுக சாதனை.

பிரசாரம்

எமர்ஜென்ஸி, மிசா கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துவிட்டு, எங்கள் கூட்டணியை குறை சொல்கிறீர்களா. உங்களை கைது செய்த காங்கிரசுடன் நீங்கள் கூட்டணி வைக்கிறீர்கள். நாங்கள் மக்களுக்கு நல்லது செய்து, நாட்டுக்கு பெருமை சேர்க்கும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் என்ன தவறு. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறி வருகின்றன. எங்கள் கூட்டணி வலிமையானது. இதில் மேலும் பல கட்சிகள் இணையவுள்ளன.” என்றார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest