
‘போராட்டக்குழு பத்திரிகையாளர் சந்திப்பு!’
சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே பணி நிரந்தரம் வேண்டி போராடிக் கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டு மறுநாள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை அடுத்தக் கட்டமாக எடுத்துச் செல்வதைப் பற்றி போராட்டத்தை முன்னெடுத்து வரும் உழைப்போர் உரிமை இயக்கத்தினர் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தனர்.

‘பணி நிரந்தரம்தான் தீர்வு!’
உழைப்போர் உரிமை சட்ட ஆலோசகர் குமாரசாமி பேசுகையில், ‘பொதுநல வழக்கு என்ற பெயரில் காவல்துறை நாடகம் நடத்தியது. வேறு சட்டங்களை மதிக்காத காவல்துறை தொழிலாளர்களுக்கு எதிராக என்றால் மட்டும் உடனே பாயும்.
எங்களின் போராட்டம் ஓயவில்லை, தொடரும். கைது செய்தவர்களை உடனடியாக விடுவியுங்கள் என நீதிபதி கூறினார். நீதிபதி எங்களுக்கு நிவாரணம் கொடுத்திருக்கிறார். எதிர்க்குரல் எழுப்ப உரிமை இருக்கிறது என நீதிமன்றம் கொடுத்திருக்கிறது. போராட அனுமதி கேட்போம். அரசு எல்லாவற்றையும் ராம்கி நிறுவனத்துக்கு சாதகமாக செய்து அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறது.

நிரந்தரம் இல்லாமல் சுதந்திரம் இல்லை. திருமாவளவன், அதியமான் போன்றோரின் கரிசனத்தை மதிக்கிறோம். திருமா எந்தச் சூழலில் அந்தக் கருத்தை சொன்னார் எனத் தெரியவில்லை. மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளக்கூடாது. அதேமாதிரி, குப்பைகளையும் மனிதன் அள்ளக்கூடாது. ஆனால், அப்படியொரு நிலையை எட்டும் வரை என்ன செய்வது? நாங்கள் அந்த வேலையை பார்க்கும் வரை எங்களுக்கான பாதுகாப்பு வேண்டும் என நினைக்கிறோம். தொழிலாளர்களின் பணி நிரந்தரம் என்கிற கனவு நிறைவேற வேண்டும். அப்படியென்றால்தான் இது பெரியாரின் சமூக நீதி மண். பணி நிரந்தரம் என்பதுதான் எங்களின் கோரிக்கை.
‘அடுத்தக்கட்டப் போராட்டம்!’
பணி நிரந்தரம் தொடர்பான வழக்கு தொழில் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் முடிவு வரும் வரை 31.07.2025 அன்று என்ன நிலையில் தொழிலாளர்கள் இருந்தார்களோ அதே நிலையில் தொடர வைக்க வேண்டும். முதலமைச்சருடன் எங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. முதலமைச்சர் அறிவார்ந்த அனுபவ அரசியல்வாதி. அவர் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார சூழலை உணர்ந்துதான் பணி நிரந்தரம் வேண்டி கடிதமெல்லாம் எழுதினார்.
தமிழ்நாடு முழுக்க போராட்டம் வெடிக்கும். ஏற்கெனவே திருநெல்வேலி, மதுரை, கடலூர் பகுதிகளில் போராட்டம் தொடங்கிவிட்டது. போராட்டத்தை சுமுகமாக முடியுங்கள். பிரச்னை தீர வேண்டாம் என்றால் நாடகம் நடத்துங்கள். பிரச்னை தீர வேண்டுமென்றால் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.
முதலமைச்சரை சந்தித்தவர்கள் அவுட் சோர்சிங் செய்யப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் வேறு யாரோ. சேகர் பாபு பெரிய ஆள். அவருடைய சாமர்த்தியத்தை குறைத்து மதிப்பிட முடியாது.
தொழிலாளிக்கு நியாயம் கேட்கும் வழக்குகளை நீதிமன்றம் தாமதப்படுத்தியிருக்கிறது.
எங்களுடைய தன்மானத்துக்கு எதிராக வருகிற எந்தக் கொம்பனுக்கும் அஞ்சமாட்டோம். நாங்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். யாருக்கும் பயப்படமாட்டோம்.

சிபிஐ மாநாட்டிலேயே தனியார்மயத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. சண்முகமும் மாநகராட்சி பணியாளர்கள் நிரந்தரமாக்குவதில் உறுதியாக இருக்கிறோம் எனக் கூறியிருக்கிறார். நாங்களும் அடுத்தகட்டமாக ரிப்பன் மாளிகைக்கு பின்புறம் அல்லது ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போராட வேண்டும் என அனுமதி கேட்டு வேப்பேரி காவல்நிலையத்தில் கடிதம் கொடுத்திருக்கிறோம்.’ என்றார்.