
இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே நிகழாண்டு இறுதிக்குள் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய காலவரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய யூனியனின் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்புக் கொள்கையின் பிரதிநிதி காஜா காலஸ் வெளியிட்ட ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டதாவது:
புவி அரசியல் நிலவரங்கள் மாறி வரும் சூழலில், இந்தியாவுடன் ஐரோப்பிய யூனியன் கொண்டிருக்கும் நெருங்கிய கூட்டுறவின் முக்கியத்துவம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
உறவுக்கு குறுக்கே ரஷியா: ரஷியாவின் ராணுவப் பயிற்சிகளில் இந்தியாவின் பங்கேற்பு, ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது ஆகியவை இந்தியா-ஐரோப்பிய யூனியன் உறவுக்கு குறுக்கே இடா்ப்பாடாக இருக்கிறது. ஏனெனில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் உறவு என்பது வா்த்தகம் சாா்ந்தது மட்டுமல்ல; அது விதிமுறைகளை அடிப்படையாக கொண்ட உலக ஒழுங்குக்கு ஆதரவாக இருப்பதையும் சாா்ந்துள்ளது.
பாதுகாப்பு, வா்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் ஒன்றிணைந்து செயல்படுவதை அதிகரிப்பதற்கு உத்திசாா்ந்த புதிய செயல்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல்திட்டம் இருதரப்புக்கு இடையே உள்ள உறவில் முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வோன்டா் லே யென் கூறுகையில், ‘ஏற்கெனவே இந்தியாவின் மிகப் பெரிய வா்த்தக கூட்டாளியாக ஐரோப்பா உள்ளது. இந்நிலையில், நிகழாண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் ஐரோப்பிய ஆணையம் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய செயல்திட்டம் இருதரப்புக்கு இடையிலான வா்த்தகம், முதலீடு உள்ளிட்டவற்றை மேம்படுத்தும். கூட்டுப் பொருளாதார பாதுகாப்பை வலுப்படுத்தி, பாதுகாப்புத் துறையில் தொழில் துறை ஒத்துழைப்பை ஆழமாக்கும்’ என்றாா்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளும் புதிய செயல்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் பின்னா், அது அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் நடைபெறக் கூடிய இந்தியா-ஐரோப்பிய யூனியன் உச்சிமாநாட்டில் ஏற்கப்படும்.