aboobacker-nimisha-nurse-ed

கேரள செவிலியருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்திவைப்பதாக யேமன் அரசு இன்று (ஜூலை 15) அறிவித்துள்ளது.

ஜூலை 16 மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், கேரளத்தைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க சன்னி முஸ்லிம் மதகுரு காந்தபுரம் ஏ.பி. அபுபக்கா் முஸ்லியார் மேற்கொண்ட முயற்சிகளைத் தொடர்ந்து, தண்டனையை நிறுத்திவைக்கப்படிருப்பதாக யேமன் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கேரளத்தைச் சோ்ந்த 38 வயது செவிலியரான நிமிஷா பிரியா, யேமன் தலைநகா் சனாவில் அந்நாட்டைச் சோ்ந்த தலால் அப்து மஹதியுடன் இணைந்து சிறிய மருத்துவமனை ஒன்றை தொடங்கி, நடத்தி வந்தாா். இதில் வருவாய் கிடைக்காததால், நிமிஷாவின் வருமானம், நகைகள், மருத்துவமனையின் உரிமம், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு, மஹதி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

2017-இல் மஹதிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது பாஸ்போா்ட்டை மீட்க நிமிஷா முற்பட்டபோது அதிகமான மயக்க மருந்து செலுத்தியதால் மஹதி உயிரிழந்தாா். மஹதியைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகத் தீா்ப்பளிக்கப்பட்டு, நிமிஷாவுக்கு வரும் புதன்கிழமை (ஜூலை 16) மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது.

நிமிஷாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தும் நோக்கத்தில், அவரின் குடும்பத்தின் கோரிக்கைக்கிணங்க, மத்திய அரசு தரப்பிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், இந்த விவகாரத்தில் தங்களால் முடிந்த சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கேரளத்தைச் சேர்ந்த ஏ.பி. அபுபக்கா் முஸ்லியார், உயிரிழந்த மஹதியின் குடும்பத்தினருடன் தொடா்பில் உள்ள யேமன் மதகுருமாா்களுடன் இழப்பீட்டை ஏற்றுக்கொள்ளுமாறு பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. யேமன் சட்டவிதிகளின்படி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினா் இழப்பீடு தொகையை ஏற்றுக்கொண்டால், மரண தண்டனையைத் தவிா்க்க முடியும்.

ஏ.பி. அபுபக்கர் மேற்கொண்ட முயற்சியால் நிமிஷாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைக்கப்படிருப்பதாக யேமன் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தண்டனையை நிறுத்தி வைப்பதாக யேமன் வெளியிட்ட அறிக்கையையும் அபுபக்கர் பகிர்ந்துள்ளார்.

யார் இந்த ஏ.பி. அபுபக்கர்?

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்திற்குட்பட்ட காந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஏ.பி. அபுபக்கர் முஸ்லியார். இவரின் இயற்பெயர் ஷேக் அபுபக்கர் அகமது. 22 மார்ச் 1931ஆம் ஆண்டு பிறந்தவர்.

தற்போது 94 வயதாகும் இவர், 2019 ஆம் ஆண்டு முதல் இந்திய சன்னி முஸ்லிம்களின் தலைவராக உள்ளார். தில்லி ராம் லீலா திடலில் பிரமாண்டமாக இவரின் பதவியேற்பு விழா நடைபெற்றது. அதிக எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்ட முஸ்லிம் மதகுரு பதவியேற்பு விழாவாக அது இருந்தது.

அகில இந்திய முஸ்லிம் அறிஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். அதுமட்டுமின்றி, அனைத்து கேரள ஜம்-இ-இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

இரு வாரங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் நடைபெற்ற உலக அமைதி மாநாட்டில் உரையாற்றும் ஏ.பி. அபுபக்கர்

நாட்டில் அமைதி மற்றும் மதப் பிரச்னைகளுக்கான பேச்சுவார்த்தைக்காக பல்வேறு மாநாடுகளை இவர் நடத்தியுள்ளார்.

துபையால் நடத்தப்பட்ட உலக சகிப்புத்தன்மை உச்சி மாநாட்டில் இந்தியாவில் இருந்து பங்கேற்று உரையாற்றியுள்ளார்.

கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் தலைவரான மறைந்த போப் பிரான்சிஸை சந்தித்தும் அமைதிக்கான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மதகுருவான ஏ.பி. அபுபக்கர், சிறந்த கல்வியாளராகவும் அறியப்படுகிறார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கல்விப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். ’கல்வியே அமைதியை ஏற்படுத்துவதற்கான வழி’ என்பதை அழுத்தமாக எல்லா இடங்களிலும் பதிவு செய்துள்ளார்.

இதையும் படிக்க | நிமிஷா பிரியாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற முயற்சி: கேரள இஸ்லாமிய தலைவர் யேமன் தலைவர்களுடன் பேச்சு

who is A. P. Aboobacker Musliyar Helped Halt Kerala Nurse Nimisha Priya’s Execution In Yemen

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest