
இப்போதெல்லாம் ஆன் லைன் பேமென்ட் ஆப்களில் இருந்து பணம் அனுப்புவது அதிக மாகிவிட்டது. இப்படி பணம் அனுப்பும்போது சில நேரங்களில், தவறாக வேறொரு நபருக்கு பணம் அனுப்பி விடுவோம்; ஒரே நபருக்கே இரு முறை அனுப்பிவிடுவோம். இதுபோன்ற தவறுகள் நடந்துவிட்டால் என்ன செய்யலாம்..?
ஆன்லைன் பேமென்ட் ஆப்களில், ஒரு முறை வங்கிக் கணக்கில் இருந்து பணம் டெபிட் ஆகிவிட்டால், ஆகிவிட்டதுதான். அந்தப் பரிவர்த்தனையை ரத்து செய்ய முடியாது. அதனால், தவறுதலாக யாருக்கேனும் பணம் அனுப்பிவிட்டீர்கள் என்று தெரிந்த உடனேயே, விரைவாகச் செயல்படுங்கள். இதுதான் இந்த மாதிரியான சூழல்களில், முதல் மற்றும் முக்கியமான ரூல். முதலில், நீங்கள் பணம் அனுப்பியவரிடம் பேசிப்பார்க்கலாம். உங்களது பணத்தை அவர் திருப்பி அனுப்ப மறுத்தால்… இல்லை திரும்ப பெற முடியாத வேறொரு சிக்கல் எழுந்தால், ஆன்லைன் பேமென்ட் ஆப்களிலேயே இது குறித்து முறையிடலாம்.
அடுத்ததாக, நீங்கள் தவறாக மேற்கொண்ட பரிவர்த்தனை விவரங்களை, விளக்கமாக ஒரு கடிதமாக எழுதி, உங்களது வங்கியிடம் புகாராகக் கொடுக்கலாம். வங்கியின் மெயில் ஐ.டிக்கும் அனுப்பலாம். அப்போதும் பிரச்னை சரியாகவில்லை எனில், நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (NPCI – National Payments Corporation of India) ‘Dispute Redressal Mechanism’ செல்லில் புகாரளிக்கலாம். டோல் ஃப்ரீ எண்ணான 1800-120-1740-க்கு போன் செய்தும் புகாரளிக்கலாம்.
என்.பி.சி.ஐ-ன் லேட்டஸ்ட் சட்டத்தின் படி, நீங்கள் யாருக்காவது தவறாகப் பணம் அனுப்பி விட்டால், அதைத் திரும்ப பெறும் ‘Payment Reversal Request’-ஐ ஒரு மாதத்துக்கு 10 முறை மட்டுமே செய்ய முடியும். அதுவும் ஒருவருக்கே திரும்பத் திரும்ப தவறாகப் பணம் அனுப்பப் பட்டிருந்தால், அவரிடம் இருந்து அதிக பட்சமாக 5 முறை மட்டுமே ரிவர்சல் பேமென்ட் பெற முடியும்.
இந்தச் சிக்கல்கள் எதிலும் சிக்காமல் இருக்க, முதலில் ஒரு ரூபாயை மட்டும் அனுப்பி, பணம் வந்துவிட்டதா என்று செக் செய்யும் யுக்தியை பலரும் பின்பற்றுகிறார்கள். இதை ஃபாலோ செய்தால்கூட நல்லதுதான்.
அதேசமயம், ‘தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டேன்’ என்று சொல்லி, அந்த பணத்தைத் திரும்ப அனுப்பச் சொல்லியும் மோசடிகள் ஆரம்பித்து விட்டன, எதுவாக இருந்தாலும் வங்கி மூலமாகத் தீர்வு காண்பதே சரியானது.