
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஆர்.சி.பி பவுலர் யஷ் தயாள் தன்னுடன் 5 ஆண்டுகள் ரிலேசன்ஷிப்பில் இருந்ததாகவும், திருமணம் செய்வதாகக் கூறி மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தன்னைச் சுரண்டியதாகவும் ஜூன் 21-ம் தேதி மாநில முதல்வர் அலுவலகத்தின் ஆன்லைன் குறைதீர்க்கும் போர்ட்டலில் புகாரளித்திருந்தார்.
அந்தப் புகாரின்படி யஷ் தயாள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 69 (திருமணத்தில் பேரில் ஏமாற்றுதல்)-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தப் பிரிவில், யஷ் தயாள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்க நேரும்.
ஆனால், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் குற்றச்சாட்டு எழுப்பியது முதல் BNS பிரிவு 69-ன் கீழ் வழக்கு பதிவானது வரை யஷ் தயாள் எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.
இந்த நிலையில், தனக்கெதிராகப் புகாரளித்த பெண் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யுமாறு பிரயாக்ராஜ் காவல்துறையில் யஷ் தயாள் புகாரளித்திருக்கிறார்.
அந்தப் புகாரில், 2021-ல் இன்ஸ்டாகிராம் மூலம் அப்பெண் தனக்கு அறிமுகமானதாகக் குறிப்பிட்டிருக்கும் யஷ் தயாள், அப்பெண் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் மருத்துவ சிகிச்சை என்று கூறி லட்சக் கணக்கில் பணம் வாங்கியதாகவும், திருப்பித் தருவதாகக் கூறி இதுவரை தரவில்லை என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார்.

மேலும், அப்பெண் ஷாப்பிங் செய்வதற்காகத் தன்னிடம் பலமுறை கடன் வாங்கியதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், ஐபோன், லேப்டாப் போன்றவற்றை தன்னிடமிருந்து எடுத்துச் சென்றுவிட்டதாகவும் புகார்களை அடங்கியிருக்கும் யஷ் தயாள், அப்பெண்ணின் குடும்பத்தினர் இருவர் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ய வேண்டுமென்று முறையிட்டிருக்கிறார்.