WhatsApp-Image-2025-03-14-at-16.03.35

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த சேமலைக்கவுண்டன்புதூர் தோட்டத்து வீட்டில் வசித்த தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகிய மூவரும் கடந்த ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி வீட்டில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டனர். அவர்களின் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த கொலை வழக்கு 100 நாள்களைக் கடந்தும், தனிப்படை போலீஸார் விசாரணையில் முன்னேற்றம் ஏதும் இல்லாததால், வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

இதையடுத்த, 5 மாதங்களில், ஈரோடு மாவட்டம், சிவகிரிக்கு அருகேயுள்ள விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமசாமி (75). இவருடைய மனைவி பாக்கியம்மாள் (65). இவர்கள் இருவரும் மேகரையான் தோட்டத்திலுள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், ஏப்ரல் 30-ஆம் தேதி பாக்கியம்மாளும் ராமசாமியும் தலையில் பலத்த காயத்துடன் உயிரிழந்து கிடந்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற போலீஸ் விசாரணையில், பாக்கியம்மாள் அணிந்திருந்த ஆறு பவுன் தாலிக்கொடி, நான்கு தங்க வளையல்கள், முக்கால் பவுன் கம்மல் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

கொலை

இதைத் தொடர்ந்து, போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணையைத் தொடங்கினர். அதில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், சந்தேகத்துக்கு இடமான வகையில் கொலை நடைபெற்ற நாளில் இருசக்கர வாகனத்தில் அரச்சலூரைச் சேர்ந்த மாதேஷ், ரமேஷ் மற்றும் அச்சியப்பன் ஆகிய மூவர் சென்றது தெரியவந்தது. மூவரைப் பிடித்து பிடித்து போலீஸார் நடத்திய விசாரணையில், தோட்டங்களில் தேங்காய் பறிக்கும் வேலைக்குச் செல்லும்போது, அங்கு வயதானவர்கள் தனியாக இருப்பதை அறிந்து பின்னர் அவர்களை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது. அதுபோல், சிவகிரியில் தனியாக இருந்த முதியவர்களான ராமசாமி, பாக்கியம்மாள் தம்பதியை நகைக்காக அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. மேலும், திருப்பூர் மாவட்டம், சேமலைக்கவுண்டன்புதூர் தோட்டத்து வீட்டில் வசித்த தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகிய மூவரையும் பணம் மற்றும் நகைக்காக மூவரும் சேர்ந்து அடித்துக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டனர். கொலை செய்தபின், செந்தில்குமாரின் செல்போனை அங்கிருந்த கிணற்றில் வீசியதாகவும் தெரிவித்தனர்.

செல்போன் மீட்பு

செல்போன் மீட்பு…: இதைத் தொடர்ந்து பல்லடம் தீயணைப்புத் துறை வீரர்களின் உதவியுடன் செந்தில்குமாரின் செல்போனை மீட்கும் பணியில் சிபிசிஐடி போலீஸார் ஈடுபட்டனர். இதற்காக சுமார் 50 அடி ஆழம் கொண்ட கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதன் பின், சுமார் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் எலெக்ட்ரானிக் கருவிகள், கண்டறியும் உபகரணத்துடன் கிணற்றுக்குள் இறங்கி செல்போனை தேடினர். அதில், கிணற்றுக்குள் இருந்து செல்போன் ஒன்று கண்டறியப்பட்டது. அந்த செல்போன் செந்தில்குமாருக்குச் சொந்தமானதுதானா என்பது குறித்து அவரது மனைவியிடம் சிபிசிஐடி போலீஸார் உறுதிப்படுத்தினர். கொலை நிகழ்ந்து 8 மாதத்துக்குப் பிறகு இந்த வழக்கின் முக்கிய சாட்சியான செந்தில்குமாரின் செல்போன் கிடைத்திருப்பது பல்லடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest