
பழனியில் உள்ள மண் திட்டில் பகுதியில் வசிப்பதற்கு வீடில்லாமல் கிழிந்த தார்பாய்களால் பெரும் சிரமத்துடன் வசிப்பதாக ஜுனியர் விகடன் இதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த செய்திக்காக மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் விளக்கம் பெற்று வெளியிட்டோம். இந்த செய்தி நேற்று புதன்கிழமை ஜூனியர் விகடன் இதழில் வெளியானது. பழங்குடி மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் மாநில பழங்குடி நல இயக்குநர் அண்ணாதுரையிடம் கலந்தலோசித்தார். இதனடிப்படையில் உடனே பழங்குடி நல இயக்குநர் அண்ணாதுரை மண் திட்டில் வாழும் மலசர் பழங்குடி மக்கள் 16 குடும்பங்களுக்கு தொல்குடி திட்டத்தின் கீழ் 5,73,000 ரூபாய் மதிப்பில் வீடுகளை கட்டி தருவதற்கான ஆணையை பிறப்பித்துள்ளார்.

இது குறித்து பழங்குடியின நல ஆணையத்தின் இயக்குநர் அண்ணாதுரையிடம் பேசியபோது, ” தொடர்ச்சியாக பழங்குடி மக்களுக்கு வீடு கட்டுவதற்கான வேலைகளை செய்து வருகிறோம். குறிப்பாக விளிம்பு நிலையில் வாழும் பளியர், முதுவர், காடர், மலசர் போன்ற பழங்குடி சமூகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். கடந்த வருடம் 2500 வீடுகள் வரை கட்டப்பட்டது. இந்த வருடம் தற்போது வரை ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதோடு பழங்குடியின மக்களின் மொழி மற்றும் பண்பாடு ஆகியவற்றை சேகரித்து அவற்றை இணையதளத்தில் பதிவேற்றுகிறோம்” என்றார்.