
மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கும் ஐஎஸ்ஐ அமைப்புக்கும் இடையேயான தொடர்பு குறித்து தஹாவூர் ராணா வாக்குமூலம் அளித்துள்ளார்.
2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 166 பேர் பலியாகினர். லஷ்கா்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் நடத்திய இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானை பூா்விகமாக கொண்ட தஹாவூா் ராணா கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இவர் லஷ்கா்-ஏ-தொய்பா இயக்கத்துக்கு நிதியளிப்பது உள்ளிட்ட உதவிகளை செய்தது நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரை குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பளித்து, லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அடைத்தது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு தஹாவூர் ராணா நாடுகடத்தப்பட்டார்.
தஹாவூர் ராணா வாக்குமூலம்
தஹாவூர் ராணாவை காவலில் எடுத்த தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள், தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான ஆழமான தொடரபை தஹாவூர் ராணா வாக்குமூலமாக அளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தாக்குதல் நடந்த சமயத்தில் தான் மும்பையில் இருந்தது தற்செயலானது கிடையாது, தாக்குதல் திட்டத்தின் ஒரு பகுதி என்றும் தாக்குதல் நடத்திய இடத்தை முன்னதாகவே உளவு பார்த்ததாகவும் தஹாவூர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், தானும் டேவிட் ஹெட்லியும் லஷ்கா்-இ-தொய்பாவின் பயற்சியைப் பெற்றதையும், மும்பை தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா முதன்மை உளவு அமைப்பாக செயல்பட்டு, ஐஎஸ்ஐ அமைப்புடன் ஒருங்கிணைந்து தாக்குதல் திட்டத்தை மேற்கொண்டதாக மும்பை குற்றப்பிரிவிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத்துடன் தொடர்பு
கலீஜ் போரின் போது பாகிஸ்தான் ராணுவத்தால் தான் செளதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டதை ராணா ஒப்புக்கொண்டுள்ளார். இது ராணாவுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையேயான நீண்டகால தொடர்பை உறுதி செய்துள்ளது.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மும்பை காவல்துறையினர் ராணாவை கைது செய்து காவலில் எடுப்பதற்கான பணிகளை விரைவு படுத்தியுள்ளது.
Tahawur Rana has given a Confession regarding the connection between the Mumbai terror attack and the ISI.