
தான் எதிர்பார்த்ததைவிட எம்.பி. பதவியில் வேலை அதிகமாக இருப்பதாக பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
ஹிமாசல் மாநிலத்தின் மண்டி தொகுதி எம்.பி. கங்கனா ரணாவத், தனது எம்.பி. பதவி குறித்து செய்தியாளர்களுடன் மனம்திறந்து பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், எனக்கு எம்.பி. பதவிக்கு போட்டியில் வாய்ப்பு கொடுத்தபோது, பாராளுமன்றத்துக்கு வெறும் 60 முதல் 70 நாள்கள் மட்டுமே வரவேண்டியிருக்கும் என்றுதான் சொன்னார்கள்.
மற்ற நாள்களில் எனது வேலையைப் பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். ஆனால், எம்.பி. பதவியில் இவ்வளவு வேலை இருக்கும் என்று நான் சிறிதும் நினைத்துப் பார்க்கவில்லை.
எம்.பி. பதவி அதிக வேலை கொண்டதாக இருக்கிறது; எனக்கும் நன்றாகப் புரிகிறது என்று தெரிவித்தார்.
முன்னதாக, அரசியல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த கங்கனா,
“நான் அரசியல் வாழ்க்கையை ரசிக்கிறேன் என்று சொல்ல மாட்டேன். இது மிகவும் வித்தியாசமான சமூக சேவை போன்ற வேலை. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நான் நினைத்ததுகூட இல்லை.
நான் பெண்களின் உரிமைக்காக போராடியிருக்கிறேன். ஆனால் அது வேறு. ஒருவர் பாதாள சாக்கடை பிரச்னையெல்லாம் என்னிடம் வந்து கூறுகிறார். சாலைப் பிரச்னைகளைத் தீர்க்க, என்னிடம் இருக்கும் பணத்தைச் செலவழிக்குமாறு கூறுகின்றனர். எம்.பி. பதவியில் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் வேலைபார்த்து வரும் பணத்தில்தான் உங்கள் தொகுதிக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்… ஆதார், வெறும் அட்டைதானா?