
ஆளும் பாஜக அரசின் பிரதிநிதியாக இந்தியத் தேர்தல் ஆணையம் மாறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்திருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி, இன்று(ஆகஸ்ட் 9) தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்களையும் வெளியிட்டார்.
மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் வாக்குத் திருட்டு நடைபெற்றதாகவும் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதாகவும் ராகுல் காந்தி அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, பிகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், மகாராஷ்டிரத்தை போன்று பிகாரிலும் வாக்குத் திருட்டு நடத்த முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இதற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்திய தேர்தல் ஆணையம் ஆளும் பாஜக அரசின் பிரதிநிதியாக மாறிவிட்டதாகவும், வாக்குத் திருட்டு விவகாரத்தில் ஜனநாயகத்தை மீட்க வேண்டிய நேரம் இது” என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கார்கே தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு காலத்தில் உலகளவில் பாராட்டப்பட்டு வந்தது. பாரபட்சமின்றி எவ்வாறு தேர்தல் நடத்த வேண்டும் என்பதை பல நாடுகளும் நம்மிடம் பயிற்சி பெற்றன.
ஒரு அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்திடன் கேள்வியெழுப்பும் போது, அரசியலைப்பின் மரபுப்படி கண்ணியத்துடன் பதிலளிக்கும் அல்லது கேள்வி குறித்து தெளிவுபடுத்தும்.
இன்று, தேர்தல் ஆணையத்திடம் யாராவது கேள்வி எழுப்பினால், பதிலளிப்பதற்குப் பதிலாக, அது ஆளும் பாஜகவின் பிரதிநிதியாகச் செயல்படுகிறது. மேலும், குற்றச்சாட்டுகளை சுமத்தி, எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளைக் கருத்தில் கொள்ளாமல் ஆதாரமற்ற அறிக்கைகளை வெளியிடுகிறது.
கர்நாடகத்தின் மகாதேவபுரா தொகுதியின் வாக்குப் பதிவை மேற்கோள் காட்டி, தேர்தல் ஆணையம் ஒரே தேர்தலில் அனுமதித்த முறைகேடுகளையும், அந்தத் தேர்தலில் முறைகேடாக 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளதையும் விளக்கினார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும். கர்நாடகத்தின் பெங்களூருவில் உள்ள சுதந்திர பூங்காவில் இருந்து நாளை விழிப்புணர்வைத் தொடங்குவோம்.
ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற, நாட்டைக் காப்பாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது!” எனப் பதிவிட்டுள்ளார்.