netanyahu2

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதல் கரம் தினம் தினம் நீண்டுக்கொண்டே இருக்கின்றன.

2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இந்தப் போர் இன்னும் சில தினங்களில் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ஆனால், அது முடிவடைவதற்கான எந்த அறிகுறியும் இப்போது வரை இல்லை.

வெறும் பேச்சு மட்டுமல்ல…

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சமீபத்தில், ‘பாலஸ்தீன் என்கிற ஒரு பகுதி இனி இருக்காது’ என்று பேசியிருக்கிறார்.

வெறும் பேச்சு மட்டுமல்ல… அவரது ஒவ்வொரு செய்கைகளும் அப்படி தான் இருக்கின்றன.

இரவு பகலாக ஏவுகணை தாக்குதல்கள், டிரோன் தாக்குதல்கள் என வான்வழி தாக்குதல்களைப் பாலஸ்தீனத்தின் மீது பொழிந்து வருகிறது இஸ்ரேல்.

தற்போது தரைவழி தாக்குதல்களையுமே தொடங்கி உள்ளது.

காசா
காசா

காசா உணவிலும்…

தாக்குதல் மூலம் தான் கெடுபிடி என்றால், மக்களுக்கு உணவு சென்றடைவதிலும் பிரச்னை செய்கிறார்கள்.

ஐக்கிய நாடுகளின் அறிக்கை படி, 10-ல் 9 உணவு டிரக்குகள் இஸ்ரேலால் தடுக்கப்படுகின்றன… சூறையாடப்படுகின்றன.

இந்த மாதத்தின் தொடக்கத்தில், காசாவில் இருந்து வெளியேறிவிடுங்கள் என்று காசா மக்களை நேரடியாகவே எச்சரித்திருந்தார் நெதன்யாகு. காசா பகுதியின் மீது தாக்குதலும் தொடர்ந்து வந்தது… வருகின்றது.

அதனால், காசா பகுதி மக்கள் தங்களது சொந்த மண்ணை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இந்தத் தாக்குதலுக்கு பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும், நெதன்யாகு அமைதியாவதாக இல்லை.

பாலஸ்தீனத்திற்கு நெகட்டிவ் என்ன?

உலக அளவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு எதிராகவும் இன்னும் வலுவான குரல்கள் எழாததற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அது, பாலஸ்தீனத்தை இன்னும் பல நாடுகள் ‘ஒரு நாடாக’ அங்கீகரிக்கவில்லை. இதற்கு அங்கு மலிந்து கிடக்கும் தீவிரவாதம் தான் முக்கிய காரணம்.

ஆனால், இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சில நாடுகள் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்திருந்தன.

அங்கீகரித்த நான்கு நாடுகள்

அதில் சில நாடுகளான, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, போர்ச்சுகல் ஆகிய நாடுகள் நேற்று பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்துவிட்டன.

இந்த நான்கு நாடுகளுமே இஸ்ரேலுடன் நல்ல நட்பில் இருக்கக்கூடிய நாடுகள் தான்.

நெதன்யாகு
நெதன்யாகு

இந்த நாடுகளைத் தொடர்ந்து பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் விரைவில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கலாம்.

பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெதன்யாகு, “பாலஸ்தீனம் என்று ஒன்று இருக்கவே இருக்காது.

பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கும் நாட்டு தலைவர்களுக்கு ஒரு செய்தி: நீங்கள் பெரிய தொகை கொடுத்து தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறீர்கள்.

உள்நாடு, வெளிநாடு மிகப்பெரிய அழுத்தங்களுக்கு எதிராக நான் தீவிரவாத நாடு ஒன்று உருவாவதைத் தடுத்து இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இது அந்த நாடுகளுக்கான ஒருவித எதிர்ப்புகள் ஆகும்.

இது இஸ்ரேலுக்கு நெருக்கடியைத் தருமா?

இதுவரை பாலஸ்தீனம் ஒரு நாடாக அங்கீகரிக்கப்படாதது தான், அந்த நாட்டிற்கு மிகப்பெரிய நெகட்டிவாக இருந்தது. இப்போது ஒவ்வொரு நாடாக பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க தொடங்கியுள்ளது.

அந்த நாடுகளின் ஒட்டுமொத்த குரல்களும் இஸ்ரேலுக்கு எதிராக மாறும். இது மிகப்பெரிய நெருக்கடியை இஸ்ரேலுக்கு தரும்.

ஐரோப்பிய நாடுகளுக்கு உள்ள நெருக்கடி!

ஐரோப்பிய நாடுகள் இனி அடுத்தடுத்து பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிப்பதைப் பார்க்க முடியும். காரணம், ஒட்டுமொத்த ஐரோப்ப நாடுகளும், ரஷ்யா – உக்ரைன் போரில் உக்ரைனுக்கு சாதகமாக உள்ளது.

ஆனால், அவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் குரல் கொடுக்காதது எதிர்ப்பலைகளைக் கிளப்பியிருந்தது. அதனால், அவர்கள் தற்போது பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர்.

அப்போது தான், அவர்கள் உக்ரைனுக்காக மிக வலுவாக குரல் கொடுக்க முடியும்.

ரஷ்யா, உக்ரைன்
ரஷ்யா, உக்ரைன்

இந்தியா பாலஸ்தீனத்தை அங்கீகரித்துவிட்டதா?

1988-ம் ஆண்டே, பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரித்துவிட்டது இந்தியா. ஆனால், அது பெரியளவில் இஸ்ரேலுக்கு எதிராக நிலைபாட்டை எடுக்காததற்கு பாலஸ்தீனத்தில் தீவிரவாதம் ஓங்கி உள்ளது தான் காரணம்.

இது இந்தியாவின் அடிப்படை கொள்கைக்கு எதிரான ஒன்றாகும்.

ஆனால், கத்தாரின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு இந்தியா கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்திருந்தது.

ஆக, இந்தியா இன்னொரு நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படும் போது குரல் கொடுக்கும் என்பது தெளிவாகிறது.

அதிருப்தியில் ட்ரம்ப்

இதுவரை பாலஸ்தீன ஹமாஸைக் கடுமையாக எச்சரித்து வந்த ட்ரம்பும், தற்போது நெதன்யாகுவின் மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

ஆக, உலக நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்ரேலுக்கு எதிரான குரலை முன்னெடுக்கின்றன.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest