
மேஜிக் 20 தமிழ் ஆடியோபுக் மற்றும் பாட்காஸ்ட் நிறுவனம், ‘மேஜிக் பெண்கள்’ பாட்காஸ்ட் மூலம் 75 பெண் தொழில் முனைவோர்களின் அனுபவத்தைப் பதிவு செய்துள்ளது. அதனைக் கொண்டாடும் வகையிலான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. புதிதாக தொழில் தொடங்கியிருக்கும், தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பல வெற்றி பெற்ற பெண் தொழில்முனைவோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்தனர்.

யூடியூபராக இருந்து தொழில் முனைவோராக மாறியுள்ள ராஜிஸ் கிச்சனின் நிறுவனர் ராஜாதி கமலக்கண்ணன் பேசுகையில், “யூடியூப் கன்டென்ட் கிரியேட்டராக இருந்து தொழில்முனைவோராக மாறும்போது பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. நான் குழந்தைகளுக்கான உணவுப்பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்கிறேன். நான் தயாரிக்கும் உணவுப்பொருள்களை என் குழந்தைகளுக்கும் கொடுக்கும்போதுதான் மக்களுக்கு அதன் மீது நம்பிக்கை உண்டாகும். பிசினஸை பொறுத்தவரை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை சம்பாதிப்பது தான் முக்கியம். அது தான் சரியான புரொமோஷனும்கூட” என்றார்.
பொருளாதாரம் மற்றும் குடும்ப பிசினஸ் நிபுணரும் எஸ்.பி. ஜெயின் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் அண்ட் ரிசர்ச்சின் செயல் இயக்குநருமான துளசி ஜெயக்குமார் பேசும்போது, “ஒரு நபர் தொழில்முனைவோராக வேண்டுமானால் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அதுவே ஒரு பெண் தொழில்முனைவோராக ஆக வேண்டுமென்றால் அந்த சவால்கள் பல மடங்கு அதிகரித்துவிடும். 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பெண்களை கொண்ட நாடு இந்தியா.

இங்கு பெண்களை வணிகத்தில் முதன்மையாக்கினால் தனி நபர் வருமானம் அதிகரிக்கும். இதனால் தனிநபர் வருமானத்தில் உலக அளவில் நான்காம் இடத்தில் இருக்கும் இந்தியா இரண்டாம் இடத்தை அடைந்துவிடும். முதல் இடத்தை அடைந்தாலும் ஆச்சர்யம் இல்லை” என்றதோடு, பெண்கள் பங்களிப்பால் பொருளாதாரத்தில் உயர்ந்த பல்வேறு நிறுவனங்களின் புள்ளிவிவரங்களையும் தெரிவித்தார்.
கெவின்கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.கே ரங்கநாதன் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் பற்றி பேசினார். “ஏஐயுடன் தொடர்புகொள்வதன் மூலம் ஒரு வலுவான ஐடியாவை உருவாக்க முடியும். அந்த ஐடியாவை சரியாக செயல்படுத்திவிட்டால் வெற்றி நிச்சயம். தரமான ஐடியாவை உருவாக்குவதில் இருந்து சிறந்த முறையில் செயல்படுத்துவது வரை ஏ.ஐ ஒரு நல்ல உதவியாக இருக்கும். எனவே, தொழில்முனைவோர்கள் ஏ.ஐயுடன் இணைந்து செயல்பட கற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.

ஹோட்டல் சவேராவின் இணை நிர்வாக இயக்குநர் நீனா ரெட்டி, ஸ்வீட் காரம் காப்பியின் நிறுவனர் நளினி பார்த்தீபன், மாஃபாய் குழுமத்தின் நிறுவனர் லதா ராஜன், பைட்ஸ்கார்ட்டின் நிறுவனர் ரேவதி அசோகன், நியூட்ரி ஜார் நிறுவனர் விஜி உள்ளிட்டப் பல பெண் தொழில்முனைவோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.