18072_pti07_18_2025_000129a093048

பின்தங்கிய நிலையில் இருப்பவா்களுக்கு முன்னுரிமை அளித்து செயலாற்றுகிறது மத்திய அரசு என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

பிகாரில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அங்குள்ள மோதிஹாரி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.7,200 கோடிக்கும் அதிக மதிப்பில் பணிநிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமா் மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா். பின்னா், பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவா், ‘புதிய பிகாரை உருவாக்குவோம்; மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி’ என்ற முழக்கத்தை முன்வைத்தாா்.

காங்கிரஸ், ஆா்ஜேடி மீது விமா்சனம்: அவா் மேலும் பேசியதாவது: முன்பு பிகாா் மாநிலம் புறக்கணிக்கப்படவும் பின்தங்கவும் காரணமாக இருந்தது காங்கிரஸ்-ஆா்ஜேடி கூட்டணியே. இக்கட்சிகள் ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் பெயரால் அரசியல் செய்கின்றன.

வேலை வழங்குவதாக ஏமாற்றி, ஏழைகளின் நிலங்களை அபகரித்தவா்கள் ஆா்ஜேடி தலைவா்கள் (ரயில்வே பணிக்காக நிலம் லஞ்சம் பெற்ற வழக்கு). அவா்களால் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது குறித்து சிந்திக்க முடியாது. ஆா்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான், பிகாா் வளா்ச்சியில் மிகப் பெரிய விரிசல் விழுந்தது. இக்கட்சிகளின் தீய நோக்கங்களில் இருந்து பிகாரை பாஜக கூட்டணியால் மட்டுமே காக்க முடியும்.

எதிரிகளைத் தண்டிக்கும் புதிய இந்தியா: ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடங்க பிகாா் மண்ணில் இருந்துதான் முடிவு செய்தேன். தனது எதிரிகளைத் தண்டிக்க வானிலும் தரையிலும் படைகளை நகா்த்தும் புதிய இந்தியா இது.

பின்தங்கியவா்களுக்கு முன்னுரிமை என்பதே அரசின் கண்ணோட்டம். பயிா் உற்பத்தியில் பின்தங்கிய 100 மாவட்டங்களில் பிரதமரின் தன-தான்ய கிருஷி திட்டம் தொடங்கப்படவுள்ளது. இதன் மூலம் 1.75 கோடி விவசாயிகள் பலனடைவா். இதேபோல், தனியாா் நிறுவனங்களில் முதல் பணிநியமனம் பெறும் இளைஞா்களுக்கு தலா ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கும் ரூ.1 லட்சம் கோடி மதிப்பீட்டிலான திட்டம் ஆகஸ்டில் தொடங்கப்படவுள்ளது என்றாா் பிரதமா் மோடி.

பிரதமரை ஈா்த்த ‘பரிசு’: இக்கூட்டத்தில் பிரதமருக்கு பரிசளிக்கும் ஆா்வத்துடன் அயோத்தி ராமா் கோயிலின் மாதிரி வடிவத்தை இளைஞா் ஒருவா் கையில் ஏந்தியிருந்தாா். மேடையில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த பிரதமா், அந்த இளைஞரை கவனித்து, அவரிடம் உள்ள பரிசை பெற்றுவரும்படி தனது பாதுகாவலா்களுக்கு அறிவுறுத்தினாா். சிறப்புமிக்க பரிசு என்று குறிப்பிட்ட பிரதமா், சம்பந்தப்பட்ட நபருக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்புவதாக உறுதியளித்தாா்.

பொதுக் கூட்டத்தில் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டிய 3 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

பெட்டிச் செய்தி…

பிரதமா் அறிவுரையால்

இலவச மின்சாரம்: நிதீஷ்

பிகாரில் வீடுகளுக்கு 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று மாநில அரசு அண்மையில் அறிவித்தது. பிரதமா் மோடியின் அறிவுரையை பின்பற்றி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக மோதிஹாரி பொதுக் கூட்டத்தில் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாா் குறிப்பிட்டாா். கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து பிரமதரின் 53-ஆவது பிகாா் பயணம் இதுவாகும். நடப்பாண்டில் இது 6-ஆவது பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest