
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க மாநிலச் செயலாளர் அன்பழகன், “புதுச்சேரியில் புற்றீசல் போல ரெஸ்டோ பார்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒரு ரெஸ்டோ பாரில் நடைபெற்ற கொலை தொடர்பாக காவல் துறை மற்றும் கலால் துறை அதிகாரிகள் பல்வேறு கட்டுப்பாடுகள விதித்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.
புதுச்சேரியில் ரெஸ்டோ பார்கள் நடத்துவதற்கு போலீஸார் எந்தவித அனுமதியும் வழங்குவதில்லை. மாறாக ரெஸ்டாரன்ட்களில் உணவு சாப்பிட வருபவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்வதற்கு மட்டும் இரவு 12 மணி சுற்றுலா எஃப்.எல் 2 லைசென்ஸ் வழங்கப்படுகின்றன.
அதைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியாளர்களுக்குக் வேண்டப்பட்ட ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள், பெண்களின் அரைகுறை நடனம், ஆண், பெண் இருவரும் சேர்ந்து ஆடும் நடனம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இதற்கு கட்டணமாக ஆண், பெண் ஜோடியாக வந்தால் ரூ.3,000, ஆண் மட்டும் தனியாக வந்தால் ரூ.2,000, அரைகுறை ஆடையுடன் வரும் பெண்ணுக்கு கட்டணம் இலவசம் என்றும் அறிவித்து நடத்தப்படுகிறது.
இப்படி நடக்கும் ரெஸ்டோ பார்களில் உள்ளாட்சி நிர்வாகம் முறையாக கேளிக்கை வரிகள் விதித்து வசூல் செய்தாலே, ரெஸ்டோ பார்களில் இருந்து நகராட்சிகளுக்கு ஆண்டுக்கு ரூ.70 கோடி வருவாய் கிடைத்திருக்கும். ஆனால் இரண்டு நகராட்சிகளும் ரெஸ்டோ பார்களில் இருந்து ஒரு பைசா கூட வரியாக வசூல் செய்யாமல் இருப்பது திட்டமிட்ட மிகப்பெரிய ஊழல்.
புதுச்சேரி அரசு இந்த ரெஸ்டோ பார் விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைத்தால், எந்தவித அனுமதியும் இன்றி நடத்தப்படும் அரை குறை ஆடை நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும். அத்துடன் அவற்றை நடத்துபவர்கள் மீது வழக்கும் பதிவு செய்ய வேண்டும்” என்றார்.