
பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடி விவசாயம் சிறக்க வேண்டி, ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ஆம் தேதி சுமங்கலி பெண்கள், குழந்தைகள் காவிரி அம்மனை வேண்டி வழிபடுவது பதினெட்டாம் பெருக்கு பண்டிகையாகும்.
அதிலும் குறிப்பாக காவேரி ஆறு கடலோடு கலக்கும் பூம்புகார் சங்கமத்துறையில் காவேரி அம்மனை வழிபட்டால் பல்வேறு செல்வங்கள் பெருகும் என காவேரி புராணம் கூறுகிறது.
நிகழாண்டு காவிரியில் முழுமையான அளவிற்கு நீர் வருவதால், பூம்புகார் சங்கமத்துறையில் ஞாயிற்றுக்கிழமை ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா சிறப்பாக நடந்தது. இதை ஒட்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பெண்கள் சங்கமத்துறையில் குழுமினார்கள்.

மேலும், நிகழாண்டு திருமணம் செய்த தம்பதிகள் தங்களுடைய திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளைக் கொண்டு வந்து காப்பரிசி, தேங்காய் வெற்றிலை பாக்கு, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு மங்களப் பொருள்களைக் கொண்டு காவேரி அம்மனுக்கு படையல் இட்டனர்.
இதனைத் தொடர்ந்து, எலுமிச்சம் பழம் உள்ளிட்ட பொருள்களை காவிரி நீரில் விட்டு வழிபட்டனர். அதோடு மட்டுமல்லாமல் புதுமணத் தம்பதிகள் தங்கள் குடும்பத்தினரிடம் ஆசி பெற்றனர். இதனை ஒட்டி பூம்புகார் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிக்க: குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு