Screenshot-2025-07-20-at-10.23.27-AM

மலையாளத்தில் மாஸுக்கும், நடிப்புக்கும் பெயர்போன நடிகர் மோகன் லால். ஒருபக்கம் ரசிகர்களைப் புல்லரிக்க வைக்கும் மாஸான திரைப்படங்கள், மறுபக்கம் நடிப்பின் உச்சத்தைக் காட்டும் வகையிலான திரைப்படங்கள் என மனங்களைக் கவர்ந்து வருகிறார்.

திரைப்படத்தில்தான் தனது நடிப்பால் ரசிகர்களை தன் வசப்படுத்தி வருகிறார் என்றால், இப்போது 60 நொடிகள் விளம்பரத்திலும் நடிப்பால் மனங்களைக் கவர்ந்திருக்கிறார்.

நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கும் மோகன் லால், அந்த விளம்பரத்தில் கவர்ச்சியாக ஜொலிக்கும் நகையைக் கண்டு ஆணே, பெண்ணாகப் பிறந்திருக்கலோமோ என உணர்வதுபோல கண்ணாடி முன் அந்நகையை அணிந்து அழகு பார்ப்பதுபோல அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பெண்ணாக உணரும் மோகன் லாலின் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்து, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உச்சநட்சத்திரமாக இருக்கும் நடிகர் மோகன் லால், தயக்கமின்றி பெண்ணைப் போல பாவம் செய்து விளம்பரத்தில் நடித்திருப்பதைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து நடிகை குஷ்பு, “என்னவொரு அற்புதமான விளம்பரம். இந்தமாதிரியான விளம்பரத்தில் நடிக்க ஒரு துணிச்சல் வேண்டும். நம் மோகன் லால் அதை தைரியமாகச் செய்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிலும் உள்ள இயற்கையான பெண்மையை ஏற்றுக்கொள்வது மிகவும் சிறப்பாக வெளிப்படுகிறது. இப்படியான அற்புதமான நடிப்பை உங்களால்தான் செய்ய முடியும். இந்த விளம்பரத்தை எடுத்திருக்கும் பிரகாஷ் வர்மாவிற்கு பாராட்டுகள்.” என்று எக்ஸ் தளத்தில் பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.

மோகன் லாலின் இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest