
பெரிய சவால்களை எதிர்கொள்ள ஆப்கானிஸ்தான் தயாராக இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஜோனதன் டிராட் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆப்கானிஸ்தானின் அணியின் பயிற்சியாளராக அவர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, அந்த அணி சிறப்பாக விளையாடி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் முறையாக வங்கதேசத்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது. கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி வரை முன்னேறி அசத்தியது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழலில் ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தை இன்று எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், பெரிய சவால்களை எதிர்கொள்ள ஆப்கானிஸ்தான் தயாராக இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து, நாங்கள் நிறைய நினைவுகளை உருவாக்கியுள்ளோம். கடந்த 2023 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் முதல் முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றினோம். வங்கதேசத்தை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. அதனை ஆப்கானிஸ்தான் அணி செய்து முடித்தது.
கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் செயிண்ட் வின்செண்ட் திடலில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினோம். அந்தப் போட்டி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போட்டி. அந்த வெற்றிக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் அணியின் தன்னம்பிக்கை பல மடங்கு அதிகரித்தது. புதிய சவால்களை சந்திக்கவும், சாதனைகள் படைக்கவும் ஆப்கானிஸ்தான் அணி தயாராக உள்ளது. பெரிய சவால்கள் கண்முன்னே இருக்கும்போது, அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.
தற்போது ஆசிய கோப்பை என்ற மிகப் பெரிய வாய்ப்பு எங்கள் கண்முன்னே இருக்கிறது. அதன் பின், டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்தியா மற்றும் இலங்கையில் விளையாடிய அனுபவம் ஆப்கானிஸ்தான் அணிக்கு இருக்கிறது. டி20 உலகக் கோப்பை குறித்து தற்போது அதிகம் சிந்திக்கவில்லை. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.
Afghanistan head coach Jonathan Trott has said that the team is ready to face big challenges.
இதையும் படிக்க: இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சராகும் அப்பல்லோ டயர்ஸ்!