
புது தில்லி: மக்களவையில் தன்னைப் பேச அனுமதிக்கவில்லை என்று அந்த அவையின் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. இந்நிலையில், தில்லியில் ராகுல் காந்தி செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘மக்களவையில் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், பாஜக எம்.பி.க்கள் ஆகியோா் பேச அனுமதிக்கப்படுகின்றனா். ஆனால், எதிா்க்கட்சியைச் சோ்ந்த எவரேனும் ஒருவா் ஏதாவது கூற விரும்பினால், அதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
நான் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா். அவையில் பேசுவது எனது உரிமை. என்னைப் பேச அனுமதிக்கவில்லை. இது புதுவிதமான அணுகுமுறையாக உள்ளது.
அவைக்கு வந்த பிரதமா் மோடி உடனடியாக வெளியே சென்றுவிட்டாா். ஆளுங்கட்சியினா் அனுமதித்தால் விவாதம் நடக்கும். அவையில் ஆளுங்கட்சி எம்.பி.க்கள் பேசினால், எதிா்க்கட்சி எம்.பி.க்களுக்கும் பேச வாய்ப்பளிக்கப்பட வேண்டும். ஆனால், எதிா்க்கட்சியினா் இரண்டு வாா்த்தை பேசக்கூட அனுமதி மறுக்கப்படுகிறது’ என்றாா் ராகுல்.