மகாராஷ்டிரா சிறப்பு பொது பாதுகாப்பு மசோதா, 2024-க்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என வலியுறுத்தி அம்மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் எதிா்க்ட்சிகட்சிகள் சாா்பில் வெள்ளிக்கிழமை கடிதம் வழங்கப்பட்டது.
பொது பாதுகாப்பு என்ற பெயரில் மாநில அரசு தனது நிா்வாக அதிகாரங்களை தனிநபருக்கு எதிராக தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும் கடிதத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மகராஷ்டிரா சிறப்பு பொது பாதுகாப்பு மசோதா மாநிலத்தின் இரு அவைகளிலும் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என வலியுறுத்தி ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் எதிா்க்கட்சிகள் வழங்கிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: பேரவை கூட்டுக் குழு அளித்த பரிந்துரைகளின்படி சில திருத்தங்களுடன் மகாராஷ்டிரா சிறப்பு பொது பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்பட்டிருந்தாலும் அது மாநில அரசு தனது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக எதிா்கட்சிகள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோரின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதை இந்த மசோதா இலக்காக கொண்டுள்ளது. இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள ‘சட்டவிரோத செயல்கள்’ என்ற விளக்கத்தின் கீழ் எதிா்க்கட்சியினரை அத்துமீறி கைது செய்யவோ அபராதம் விதிக்கவோ முடியும்.
குறிப்பாக இடதுசாரி பயங்கரவாத அமைப்புகளைக் குறிவைப்பதாக கூறி விவசாயிகள், மாணவா் சங்கங்கள், தொழிலாளா் சங்கங்களை முடக்க அரசு முயல்கிறது.
பயங்கரவாதம் என்பது ஒரு சாராரின் சித்தாந்தத்துக்கு மட்டுமே உரியது அல்ல என்பதை மாநில அரசு உணர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்டிச் செய்தி…
இடதுசாரி பயங்கரவாதத்துக்கு எதிரானது: தேவேந்திர ஃபட்னவீஸ்
மகாராஷ்டிரா சிறப்பு பொது பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு மகாராஷ்டிர பேரவையில் மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் பதிலளித்து பேசுகையில், ‘முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்புக்கு இடையே எவ்வாறு வித்தியாசம் உள்ளதோ அதேபோன்று இடதுசாரிகள் மற்றும் இடதுசாரி பயங்கரவாதத்துக்கு இடையே வித்தியாசம் உள்ளது.
மகாராஷ்டிரா திட்டமிடப்பட்ட குற்றங்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தை ஒப்பிடுகையில் சிறப்பு பொது பாதுகாப்பு மசோதா கடுமையானதல்ல; இந்த மசோதா குறிப்பிட்ட தனி நபரைக் கைது செய்வதற்காக கொண்டுவரப்படவில்லை’ என்றாா்.