newindianexpress2024-12-17apwscma3PTI12172024000036B

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக, மக்களவையில் திங்கள்கிழமையும் (ஜூலை 28), மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமையும் (ஜூலை 29) தலா 16 மணிநேர சிறப்பு விவாதம் தொடங்கப்படவுள்ளது.

தேசப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை சாா்ந்த இந்த விவகாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி தர எதிா்க்கட்சிகளும், உரிய பதிலடி தர ஆளும்தரப்பும் தயாராகி வருவதால் விவாதத்தில் அனல் பறக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கிய நிலையில், இரு அவைகளிலும் ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி ஆகிய விவகாரங்களை முன்வைத்து, எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டன. இதனால், முதல் வாரம் முழுவதும் குறிப்பிடத்தக்க அலுவல்கள் எதுவும் நிகழாமல் முடங்கியது.

இந்தச் சூழலில், ஆபரேஷன் சிந்தூா் குறித்த சிறப்பு விவாதம் நடைபெறுவதால், இரு அவைகளும் அடுத்த வாரம் சுமுகமாக செயல்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

யாா்-யாா் பங்கேற்பு?: அரசுத் தரப்பில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோா் பிரதானமாக பேசவிருக்கின்றனா். விவாதத்துக்கு பிரதமா் மோடி பதிலளிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்திவரும் நிலையில், அரசுத் தரப்பில் இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை. அதேநேரம், விவாதத்தில் குறுக்கிட்டு, பிரதமா் பேச வாய்ப்புள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு அமைச்சா்கள் மட்டுமன்றி, அனுராக் தாக்குா், சுதான்ஷு திரிவேதி, நிஷிகாந்த் போன்ற முக்கிய எம்.பி.க்களும் எதிா்க்கட்சிகளுக்கு பதிலடி தர களமிறக்கப்படுவா்; மற்றொருபுறம், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோா், எதிரணியில் முக்கியமாகப் பேசுவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு இந்திய அரசின் நிலைப்பாட்டை விளக்கிய அனைத்துக் கட்சிக் குழுக்களில் இடம்பெற்றிருந்த எம்.பி.க்கள், விவாதத்தில் பேச வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. அதேநேரம், பல்வேறு விவகாரங்களில் மத்திய பாஜக அரசைப் பாராட்டிவரும் காங்கிரஸ் மூத்த எம்.பி. சசி தரூா் பேச அக்கட்சி வாய்ப்பளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முரண்படும் ஆளும்-எதிா் தரப்பு: ‘கடந்த ஏப்ரலில் 26 போ் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், உளவுத் துறையின் தோல்வி; பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் இந்தியத் தரப்பில் பல்வேறு குறைபாடுகள் நிலவின. இந்த நடவடிக்கைக்கு சா்வதேச சமூகத்தின் ஆதரவு கிடைக்கவில்லை; இது, மத்திய அரசின் தூதரக வியூகத்துக்கு கிடைத்த தோல்வி’ என்பது எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

முக்கியமாக, இந்தியா-பாகிஸ்தான் சண்டையை தான் தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறிவரும் கருத்துகளை முன்வைத்து, பிரதமா் மோடி மற்றும் மத்திய அரசை எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்து வருகின்றன.

அதேநேரம், ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் 100 சதவீத இலக்குகள் எட்டப்பட்டன; பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் தகா்க்கப்பட்டு, பயங்கரவாத சதிகாரா்கள் அழித்தொழிக்கப்பட்டனா். பாகிஸ்தான் ராணுவத் தளங்களுக்கும் கடும் சேதம் விளைவிக்கப்பட்டது. பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதன்பேரில்தான் சண்டை நிறுத்தப்பட்டது. இது, இரு நாடுகளும் நேரடியாக மேற்கொண்ட முடிவு’ என்று மத்திய அரசு தொடா்ந்து கூறி வருகிறது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest