
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலரும் மக்களவை எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி மக்களவையில் அக்கட்சி எம்.பி.க்களை வழிநடத்தும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களின் தலைவராக பதவி வகித்த அக்கட்சியின் மூத்த தலைவர் சுதீப் பந்தோபாத்யாய் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரது பதவி இப்போது அபிஷேக் பானர்ஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற எம்.பி.க்களுடன் அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி இன்று(ஆக. 4) மேற்கொண்ட ஆலோசனையில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் 28 பேருக்கும் மம்தா பானர்ஜியின் மருமகனான அபிஷேக் பானர்ஜி தலைவராக இருப்பார்.