
மணிப்பூரில் 40-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் ராஜிநாமா செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, இந்த வார இறுதியில் மணிப்பூர் செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், மணிப்பூரில் சுமார் 43 பாஜக நிர்வாகிகள் ராஜிநாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
செப். 13-ல், அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டிக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதனைத்தொடர்ந்து, மிஸோரம் மாநிலத்தில் ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி, மணிப்பூருக்கும் செல்லவிருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூருக்கு பிரதமர் செல்லவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் உக்ருல் மாவட்டத்தின் புங்யார் தொகுதியில் 43 பாஜக நிர்வாகிகள் ராஜிநாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் இதுகுறித்து கட்சி வட்டாரத்துக்குள் சில உறுப்பினர்கள் கூறுகையில், கட்சிக்குள் தற்போது நிலவும் விவகாரங்களால் மிகுந்த கவலை கொண்டுள்ளோம். கலந்தாலோசனை இல்லாதது, தலைமை மீதான மரியாதை குறித்து கவலை தெரிவித்ததுடன், இவைதான் ராஜிநாமா நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் மேலும் பேசுகையில், கட்சிக்கும் அதன் கொள்கைக்கும் மீதான எங்கள் விசுவாசம், எப்போதும் அசைக்க முடியாத ஒன்று. எங்கள் சமூகம் மற்றும் மணிப்பூர் மக்களின் நலனுக்காக பாடுபடுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம் என்றும் தெரிவித்தனர்.
இருப்பினும், பாஜக நிர்வாகிகளின் ராஜிநாமா குறித்து கட்சித் தலைமை இதுவரை எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை.