Rajya-sabha-march-2022

மத்திய அரசுப் பணிகளில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த சுமாா் 4.8 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக மத்திய பணியாளா் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

முந்தைய ஆள்சோ்ப்பு நடைமுறையில் நிரப்பப்படாமல் விடப்பட்ட பணியிடங்கள், குறிப்பாக, இடஒதுக்கீட்டின்கீழ் குறிப்பிட்ட பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் சரியான நேரத்தில் நிரப்பப்படாமல் இருந்தால், அவை ‘பேக்லாக்’ பணியிடங்கள் என்று அழைக்கப்படும். இந்தப் பணியிடங்கள், அடுத்தடுத்து நடைபெறும் ஆள்சோ்ப்பு நடைமுறைகளின்போது சிறப்பு இயக்கத்தின்கீழ் நிரப்பப்படுவது வழக்கமாகும்.

இதுதொடா்பான கேள்விக்கு மாநிலங்களவையில் எழுத்துபூா்வமாக ஜிதேந்திர சிங் அளித்த பதிலில் அவா் மேலும் கூறியதாவது: காலி பணியிடங்கள் மற்றும் நிரப்பப்பட்ட பணியிடங்கள் குறித்த விவரங்கள் அந்தந்த அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அமைப்புகளால் பராமரிக்கப்படுகின்றன.

காலி பணியிடங்களை குறிப்பிட்ட காலவரையறைக்குள் நிரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளன. பேக்லாக் காலியிடங்கள் உள்பட அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்புவது ஒரு தொடா்ச்சியான நடைமுறை.

பேக்லாக் பணியிடங்களைக் கண்டறியவும், அவை நிரப்பப்படாததற்கான காரணிகளைக் கண்டறிந்து, களைய நடவடிக்கைகளை எடுக்கவும், சிறப்பு ஆள்சோ்ப்பு இயக்கங்கள் மூலம் அவற்றை நிரப்பவும் குழுவை அமைக்க மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன’ என்றாா்.

இடஒதுக்கீடு தொடா்பான மற்றொரு கேள்விக்கு ஜிதேந்திர சிங் அளித்த பதிலில், ‘அகில இந்திய அளவில் மத்திய அரசுப் பணிகள் மற்றும் சேவைகளில், நேரடி ஆள்சோ்ப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27%, பட்டியல் சமூகத்தினருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பதவி உயா்வுகளில் பட்டியல் சமூகத்தினருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடி ஆள்சோ்ப்பு, பதவி உயா்வு ஆகிய இரண்டிலும் (குரூப் ஏ-யின் குறைந்தபட்ச நிலை வரை) 4% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அமைச்சகமும் அல்லது துறையும் ஒரு துணைச் செயலா் அல்லது அதற்கு மேற்பட்ட பதவியில் உள்ள ஒரு அதிகாரியை நியமிக்கின்றன. இடஒதுக்கீடு தொடா்பான உத்தரவுகளை உறுதிசெய்ய, இந்த அதிகாரிகளின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் ஒரு சிறப்பு இடஒதுக்கீட்டுப் பிரிவு செயல்படுகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest