
மனிதர்களின் ஆயுட்காலத்தை 150 ஆண்டுகள் வரை நீட்டிப்பது குறித்து ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர், சமீபத்தில் பேசியது சர்வதேச அளவில் கவனம் பெற்றது.
இந்த உரையாடலில் உயிரி தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், மனித உறுப்புகளை தொடர்ந்து மாற்றுவதன் மூலம், இளமையுடன் நீண்ட காலம் வாழ முடியும் என்றும், இறப்பற்ற நிலையைக்கூட அடையலாம் என்றும் புதின் குறிப்பிட்டிருந்தார்.
இதன் விளைவாக, ரஷ்யாவில் ஆயுட்காலம் நீட்டிப்பு மற்றும் வயதாவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது. ஆனால் அறிவியல் என்ன சொல்கிறது என்று இங்கு தெரிந்துக்கொள்ளலாம்.

மனித ஆயுளுக்கு இயற்கையான உயிரியல் வரம்பு இருப்பதாக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி, ஒரு மனிதன் எவ்வளவு ஆரோக்கியமாக வாழ்ந்தாலும், அவனது அதிகபட்ச ஆயுட்காலம் 120 முதல் 150 ஆண்டுகள் வரை மட்டுமே இருக்க முடியும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
Nature Communications இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின்படி வயது அதிகரிக்கும்போது, நோய்கள் அல்லது காயங்களிலிருந்து மீள்வதற்கான உடலின் திறன் (resilience) படிப்படியாகக் குறைகிறது. உதாரணமாக, ஒரு இளைஞர் உடல்நலக் குறைவிலிருந்து முழுமையாக குணமடையும் நிலையில், ஒரு வயதானவர் 95% மட்டுமே மீண்டும் பெறுகிறார். இந்த மீள்திறன் குறைபாடே ஆயுட்காலத்தின் எல்லையை நிர்ணயிக்கிறது.
சிங்கப்பூரைச் சேர்ந்த Gero என்ற பயோடெக் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்ற நவீன மருத்துவ உதவிகள் இல்லாமல், மனிதர்களால் இயற்கையாக இந்த ஆயுள் எல்லையைத் தாண்ட முடியாது என்று ஆய்வின் முடிவுகள் கூறியிருக்கிறது. இதுவரை உறுதிப்படுத்தப்பட்டதிலேயே அதிகபட்சமாக பிரான்சைச் சேர்ந்த Jeanne Louise Calment என்ற பெண் 122 ஆண்டுகள் வாழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!