amit-sha-eps

தில்லியில் அமித் ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வரும்போது முகத்தைத் துடைத்தேன், அதை வைத்து அரசியல் செய்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தில்லி பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செவ்வாய்க்கிழமை இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்கிட மத்திய அமைச்சரை சந்தித்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு அமித் ஷாவின் வீட்டைவிட்டு காரில் வெளியேறிய எடப்பாடி பழனிசாமி, தனது முகத்தை மூடிக் கொண்டு செல்வதைப் போன்ற காணொலி இணையத்தில் வைரலானது.

இதுதொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “எடப்பாடி பழனிசாமியை இன்று முதல் முகமூடியார் பழனிசாமி என்று அழைக்க வேண்டும். வானிலை காரணமாக தனது சுற்றுப்பயணத்தை தள்ளிவைப்பதாக கூறிவிட்டு, தில்லிக்குச் சென்று உள்துறை அமைச்சரை சந்தித்துள்ளார். இவர்களின் சந்திப்பு ஏற்கெனவே ஊடகங்களில் வந்த செய்திதான். ஆனால், பொய் கூறி விட்டுச் செல்வது ஏன்?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களுடன் பேசிய எடப்பாடி பழனிசாமி இதற்கு பதிலளிக்கும் வகையில்,

‘நான் அமித் ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வரும்போது கைக்குட்டையை வைத்து முகத்தைத் துடைத்தேன். உடனே முகமூடி அணிந்தார் என அதை வைத்து மலிவான அரசியல் செய்கின்றனர். நான் முகமூடி அணியவில்லை.

டிடிவி தினகரன்தான் முகமூடி அணிந்து அதிமுகவில் நுழைந்தார். 19.12.2012ல் அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். 10 ஆண்டுகள் அவர் கட்சியில் இல்லை. இதுதொடர்பாக ஜெயலலிதா கையெழுத்திட்ட ஆவணம் இருக்கிறது. பின்னர் ஜெயலலிதா மறைந்தபிறகுதான் அவர் அதிமுகவுக்கு வந்தார். அப்படிப்பட்ட அவர் என்னைப் பற்றி பேசுகிறார். இது தேவையில்லை. அவர் எந்த உள்நோக்கத்துடன் பேசுகிறார் என்று தெரியவில்லை. அவர் பாஜக கூட்டணியில் இருந்து விலகியதற்கான காரணமும் தெரியவில்லை. என்னை பற்றி விமர்சிப்பதற்கு டிடிவி தினகரனுக்கு தகுதி இல்லை.

அமித் ஷாவுடனான சந்திப்பு வெளிப்படையானது. அதிமுக பிரசார பயணம் சிறப்பாகி இருக்கிறது என்று பாராட்டினார். அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தலையிடமாட்டேன் என்று அமித் ஷா ஏற்கெனவே தெளிவாகக் கூறிவிட்டார். பாஜகவுக்கு அமித் ஷா, அதிமுகவுக்கு நான் சொல்வதே இறுதியானது.

செங்கோட்டையன் குறித்து, கட்சியின் கட்டுப்பாட்டை யார் மீறினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் பெரும்பான்மையை நிரூபித்தபோது, ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வந்தார். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்தான் இப்படி செய்வார்கள். அப்படிப்பட்ட நிலையில் வந்தவர், இன்று இப்படி பேசுவதை ஏற்க முடியாது. திமுக எம்.எல்.ஏ. மருத்துவமனையில் கிட்னி முறைகேடு போன்ற தீவிர பிரச்னைகள் நிலவி வரும் சூழ்நிலையில், நான் முகத்தை மூடியதா பிரச்னை?

மேலும் அமித் ஷா வீட்டில் இருந்து வெளியே வந்தபோது கார் இல்லாததால் கிடைத்த காரில் வந்தேன். எப்படி சென்றேன், எந்த காரில் சென்றேன் என்றெல்லாம் பார்க்காதீர்கள். சந்திப்பு பற்றி மட்டும் பேசுங்கள். யூகத்தின் அடிப்படையில் எதுவும் பேச வேண்டாம்” என்றார்.

Edappadi Palaniswami explains that he wiped his face when he came out after meeting Union Minister Amit Shah

இதையும் படிக்க | எடப்பாடியார் இன்றுமுதல் முகமூடியார் என்று அழைக்கப்படுவார்! டிடிவி தினகரன்

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest