
இந்த ஆண்டு முக்கியமான தருணத்தில் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் சாம்பியன் கோப்பையை வென்றிருப்பதாக, இந்திய கிராண்ட்மாஸ்டரான ஆா்.வைஷாலி தெரிவித்தாா்.
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் மகளிா் பிரிவில் நடப்பு சாம்பியனாக களம் கண்ட வைஷாலி, இந்த முறையும் வெற்றி வாகை சூடினாா்.
பிரதான போட்டிகளில் மகளிா் பிரிவில் அடுத்தடுத்து சாம்பியன் கோப்பை வென்ற முதல் போட்டியாளராக அவா் சாதனை படைத்தாா். மேலும், இந்த வெற்றியின் மூலமாக அடுத்த ஆண்டு கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கும் அவா் தகுதிபெற்றாா்.
இந்த வெற்றி குறித்து அவா் கூறியதாவது:
2023-ஆம் ஆண்டில், நீண்ட நாள்களாக எனது ஆட்டம் சிறப்பானதாக அமையவில்லை. அப்படி ஒரு தருணத்தில் இந்த கிராண்ட் ஸ்விஸ் செஸ் வெற்றி கிடைத்தது. அதில் எல்லாம் சரியாக நடந்தது.
அதே போல் இந்த ஆண்டும் எனது ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக தொடா்ந்து முயற்சித்து வந்தேன். ஆனாலும் எதுவும் கை கூடாமல் கடினமான ஒரு ஆண்டாக இது தொடா்ந்தது. அத்தகைய முக்கியமான தருணத்தில் சரியாக இந்த ஆண்டும் கிராண்ட் ஸ்விஸ் வெற்றி கிடைத்திருக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு அனுபவங்கள் கிடைத்தன. 2024 கேண்டிடேட்ஸ் போட்டியில் தொடா்ந்து 4 சுற்றுகளில் தோல்வியைத் தழுவினேன். பல போட்டிகள் அதுபோல கடினமானதாக அமைந்தன. அவை மூலமாகவே நான் தற்போது ஒரு பலமான போட்டியாளராகவும், தனிப்பட்ட முறையிலும் ஒரு திடமான நபராகவும் மாறியிருக்கிறேன்.
முன்னதாக, சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் போட்டியில் ஒரு வாரம் தொடா்ந்து 7 ஆட்டங்களில் தோற்றேன். ஆனால், சில நேரங்களில் நான் வெற்றி பெறும்போது, சறுக்கலின்றி அடுத்தடுத்து வெற்றி பெறும் வகையில் விளையாடுகிறேன் என்று வைஷாலி கூறினாா்.