
முத்தரப்பு டி20 தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே முதலில் விளையாடியது.
இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா
முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பிரையன் பென்னட் 43 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அதிகபட்சமாக ரியான் பர்ல் 36* ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
தென்னாப்பிரிக்கா தரப்பில் கார்பின் போஸ்ச் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லுங்கி இங்கிடி, நண்ட்ரே பர்கர் மற்றும் பீட்டர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது.
தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான லுஹான் டி பிரிட்டோரியஸ் 4 ரன்கள் மற்றும் ரீஸா ஹென்ரிக்ஸ் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின், கேப்டன் ராஸி வாண்டர் துசென் மற்றும் ரூபின் ஹெர்மேன் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடியது.
சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். கேப்டன் வாண்டர் துசென் 41 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும். அதிரடியாக விளையாடிய ரூபின் ஹெர்மேன் 36 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். டெவால்ட் பிரீவிஸ் 7 பந்துகளில் 13 ரன்கள் (ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர்) எடுத்து களத்தில் இருந்தார்.
MATCH RESULT
A dominant all-round display from our Proteas Men
Clinical with the ball, composed with the bat. A comprehensive 7-wicket victory to confirm our spot in the Tri-Series Final! #WozaNawe pic.twitter.com/Y3XPl0etRw
— Proteas Men (@ProteasMenCSA) July 20, 2025
இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றதன் மூலம், தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்ததால், ஜிம்பாப்வே அணி முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பினை இழந்தது.
முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டி வருகிற ஜூலை 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் சேர்ப்பு!
South Africa advanced to the final of the tri-series T20I after defeating Zimbabwe by 7 wickets.